2025 மே 26, திங்கட்கிழமை

'100 சதவீதமான மக்களுக்கு மின்சார வசதி'

Princiya Dixci   / 2017 மே 06 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

தெற்காசியாவிலே சுமார் 100 சதவீதமான மக்களுக்கு மின்சார வசதியினை வழங்கியுள்ள ஒரே நாடு இலங்கை என்ற பெருமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மின்வலு மற்றும்  எரிசக்தி அமைச்சர்  ரன்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தைப்பொறுப்பேற்றபோது நாட்டில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் குடியிருப்புக்களுக்கு மின்சார வழங்கப்படாதிருந்தது. வீட்டின் அருகில் மின்கம்பங்கள் இருந்தபோதிலும் மின் இணைப்பினைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்த இவர்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பினை நாங்கள் ஏற்று, வெற்றிகண்டிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு - தொப்பிகல பகுதியை அண்மித்த கோராவெளி பிரதேசத்திலுள்ள 72 குடியிருப்புக்களுக்கு மின் இணைப்பிணை புதிதாக வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் டிஎம் சந்திரபால தலைமையில் இன்று (06) நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

அமைச்சர் இப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து பேசுகையில்,

“குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால போர் மற்றும் அனர்த்தங்களினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள்கூட இல்லாதிருந்த  இப்பிரதேச மக்களுக்கு மின்சார வசதியினைப் பெற்றுக்கொடுக்க கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

“தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவரும்போது சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள், குப்பி விளக்குகளில் கல்வி கற்கும் நிலை காணப்பட்டது.

“குறிப்பாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 ஆயிரத்து 944 வீடுகளுக்கு மின்சார வசதி இல்லாதிருந்தது. தற்போது 99 சதவீதமானவர்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது“ என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X