2025 மே 10, சனிக்கிழமை

'தாய்மார் வெளிநாடு செல்வது பிள்ளைகளின் கல்விக்கு சவாலாகும்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்ப்பற்று கோட்டம் 2 இலுள்ள பாடசாலையொன்றில்  கல்வி கற்கும் மாணவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் வறுமையான வாழ்க்கைப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டுள்ளதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

தரம் ஒன்று தொடக்கம் ஒன்பது வரையுள்ள குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 193 மாணவர்களினுடைய பின்னணியைப் பார்த்தால், அவர்களில் 28 தாய்மார்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண் வேலை செய்கின்றார்கள். தாய்மார்கள் வெளிநாடு செல்வது பிள்ளைகளின் பாடசாலைக் கல்விக்கு சவாலாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இப்பாடசாலையில் கற்கும் 23 குடும்பங்கள் பிரிந்து வாழ்கின்றன. 12 மாணவர்களுக்குத் தந்தையர் இல்லை. 100 மாணவர்கள் தமது பெற்றோரின் அன்புக்காக ஏங்குவது ஆய்வில் தெரியவந்திருக்கின்றது. எனினும், இன்னமும் தாய்மார் சிலர் வந்து தாம் தமது பிள்ளைகளின் கல்விக்கு உதவும் முகமாகவும்  பொருளாதாரத்தைத் தேடிக் கொள்ளும் பொருட்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லவிருப்பதால் அனுமதிக் கடிதம் கேட்டு வருகின்றார்கள்.

இது விடயமாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நாம் பிரதேச செயலாளரின் தலைமையில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுடன் இணைந்து இப்பகுதியில் உள்ள பெற்றோருக்கு விழிப்புணர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.
எத்தனை விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெற்றபோதிலும் பெற்றோர் மத்தியில் தமது பிள்ளைகளின் கல்வி நலன் தொடர்பான விழிப்பு போதியளவில் வரவில்லை.

அது மட்டுமன்றி தாம் தொழில் புரியும் செங்கல் வாடியில் தமக்கு உதவி புரிவதற்காக பாடசாலையில் கல்வி பயிலும் தமது ஆண் பிள்ளைகளையும் அழைத்துச் செல்லும் தந்தையர்களும் இருக்கிறார்கள்.
வறுமை, பெற்றோரின் விழிப்புணர்வின்மை, தாய்மார் வெளிநாடு செல்லுதல், குடும்பப் பிரிவு அதன் காரணமாக சிறுவர்கள்

மன உளைச்சலுக்குள்ளாதல் போன்ற பல்வேறு காரணிகளால் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி சவால் நிறைந்த ஒன்றாக மாறி விட்டிருக்கின்றது எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X