Niroshini / 2015 நவம்பர் 10 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
கடந்த அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டம் மாகாண சபைகளுக்குரிய விடயங்களை உள்வாங்கியுள்ளது. எனவே, இச்சட்டம் செயலிழக்குமாறு செய்யப்பட வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைராசசிங்கம் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற 2016 – 2018ஆம் ஆண்டுக்கான உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டம் தொடர்பான 02வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணம் 25 வருடங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் வெற்றியளிக்கும் வகையில் நடைமுறைப் படுத்துவதெனில் பல்வேறு அடிப்படை அம்சங்கள் இங்கு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
அதாவது, அடிப்படை உள்ளீடுகளான விவசாயக் கிணறுகள், விவசாய உபகரணங்கள், விதை நெல் உற்பத்திக்கான ஏற்பாடுகள், நிலத்தினைச் சமப்படுத்தல், சிதைந்து கிடக்கும் குளங்களையும் வாய்க்கால்களையும் செப்பனிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
அது மட்டுமல்லாது 13வது திருத்தச் சட்டத்தின் படி விவசாயம் தொடர்பான விடயங்கள் மாகாண சபை நிரலினுள்ளே வருகின்றன.
ஆராய்ச்சியும் அதனுடன் தொடர்பான விடயங்கள் மாத்திரமே மத்திய அரசாங்கத்துக்குட்படுகின்றன. எனினும் கடந்த ஆட்சிக் காலங்களில் மாகாணத்துக்குரிய விவசாயத்துறையின் பல்வேறு அம்சங்கள் மத்திய அரசாங்கத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டம் மாகாண சபைகளுக்குரிய விடயங்களை உள்வாங்கியுள்ளது. எனவே, இச்சட்டம் செயலிழக்க செய்ய வேண்டும். அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான அதிகாரி எனும் பதவியும் தேவையற்றதொன்றாகும். விவசாய சேவைகள் துறை மாகாண சபைகளிடம் கையளிக்கப்படல் வேண்டும்.
கடற்பரப்புக்களில் கரையில் இருந்து 14 கிலோமீற்றர் தூரம் வரையுள்ள பிரதேசம் மாகாண சபைகளின் அதிகாரப் பரப்பு எல்லைக்குட்பட்டது என்கின்ற நிலைமையை அங்கீகரித்து மாகாண சபைகள் இவ்விடயத்தில் செயற்பட வழிவகைகள் செய்ய வேண்டும்.
அத்துடன், விசேடமாக, மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் 4,000 ஹெக்டெயர் பரப்புள்ள காடுகள் அம்பாறை மாவட்ட பயிர்ச்செய்கையாளர்களால் அழிக்கப்பட்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.இதனால் இப்பிரதேசத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மேய்ச்சல் தரை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவ்விடயம் பண்ணையாளர்களுக்கும் சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடிய நிலைமையை உருவாக்கியுள்ளது. இவை தொடர்பிலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், இவ்விடயங்களை அவதானத்துடன் கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி,வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குரிய தனித்துவமான பிரச்சினைகள் தொடர்பில் அவ்விடங்களுக்கு வருகை தந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தர்.
11 minute ago
28 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
32 minute ago
45 minute ago