2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'தற்காலிகமாக பெறும் சலுகைகளானது எமது உரிமைகளுக்காக இருக்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,வா.கிருஸ்ணா

'தற்காலிகமாக பெற்றுக்கொள்ளும் சலுகைகளானது எமது உரிமைகளுக்காக இருக்க முடியாது என்பதை தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு, தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி  திங்கட்கிழமை (20) மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,
'கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் நியாயமானது என்பதை நல்லாட்சி அரசாங்கம் புரிந்துகொண்டு,  அவர்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்.
 
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய கருத்துகளை
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் முன்வைக்க வேண்டும். அரசாங்கமானது கால அவகாசத்தை மட்டும் கேட்டுக்கொண்டு, பல பிரச்சினைகளைத் தீர்க்காது வைத்திருக்கின்றன. இவ்வாறான செயற்பாடு மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகும். சர்வதேச விசாரணை தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்புத் தரப்பினரினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் சில விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், எந்தச் செயற்பாடும் முழுமையாக இடம்பெறவில்லை.
 
எனவே, கால இழுத்தடிப்புச் செய்யாமல் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். பாதுகாப்புத் தரப்பினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில்; உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார்.  
 
மத்திய அரசாங்கத்தில்; குவிக்கப்பட்ட அதிகாரங்கள் மாகாண மட்டங்களுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஆட்சி முறை இருக்கும்போதே, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலைப்பாடு உள்ளது.
 
நாங்கள் ஒன்றுபட்டு செயற்படும்போது, எமது மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியும எனவே, தமிழ் பேசும் சமூகம் மத, கலாசார  ரீதிகளாக வேறுபட்டு நிற்காமல் இணைந்து செயற்படும் நிலைமைக்கு வரவேண்டும். தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து செயற்படுவதனால் எவ்வித தீமையும் ஏற்படப் போவதில்லை. பலன் பெற முடியும்' என்றார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X