2025 மே 08, வியாழக்கிழமை

'5 நாட்களுக்குள் துரிதமான சேவையை வழங்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்,வடிவேல் சக்திவேல்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித் 

2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட சுற்றுநிரூபத்தில் அரச நிறுவனங்களில் பொது மக்களினால் கோரப்படும் சேவைக்கு 5 நாட்களுக்குள் துரிதமான சேவையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்களால் இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற சேவையை செய்வதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரச சேவைகளில் 2 சதவீதமானவர்கள் சேவையாற்றும் போது 98 சதவீதமான தொழில் துறைசார் விற்பனர்கள் வெளியில் இருந்து எமது செயற்பாடுகளை அவதானிக்கின்றனர்.இந்நிலையில்,பொதுமக்களின் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் தொழில்சார் மனப்பான்மையை அரச உத்தியோகத்தர்கள் வளர்க்க வேண்டும்.

அரச உத்தியோகத்தர்கள் சம்பளத்துக்கு மேலாக கையூட்டல்களைப் பெறுவது அவதானிக்கப்படும் போது அதற்கு பொதுமக்களும் காரணமாகவிருந்து செயற்படுகின்றனர். அவர்கள் அவர்களது உரிமைகள் மற்றும் சலுகைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதேவேளை,சர்வதேச ஊழல் எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச செயலகத்தில் உத்தியோகஸ்தர்கள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

ஊழல் என்பது சர்வதேச ரீதியில் எயிட்ஸ் நோயைவிட அதிகமாகப் பரவி வருகின்றது. ஆனால் எமது நாடு ஊழலில் குறைவாக இடத்தில்தான் இருந்து கொண்டிருக்கின்றது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

ஊழல்களுக்கு, பொதுமக்களோ, அல்லது அலுவலக உத்தியோகஸ்தர்களோ காரணமல்ல மூன்றாவது நபர்தான் எங்கிருந்தோ வந்து இடைநடுவில் இதில் அகப்படுகின்றார். அவ்வாறான மூன்றாம் நபர்களை அரச உத்தியோகஸ்தர்கள் இனம்கண்டு அவர்களிடம் சிக்காமல் பொதுமக்களையும் சிக்கலுக்குண்டுபடுத்தாமல் மக்களுக்குத் தேவையான உதவிகளை அரச உத்தியோகஸ்தர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இப்பிரதேசத்திலுள்ளவர்களில் 50 வீதமானவர்கள் வறுமையின் விழிம்பில் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறானவர்களை நாங்கள் தட்டிக்கொடுத்து வறுமையில் வாடுபவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதில் அரச உத்தியோகஸ்த்தர்கள் பின்வாங்கக் கூடாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X