2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

‘பெண்கள் அமைப்பு துணிவோடு முன்வரவில்லை’

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“எழுக தமிழோடு இணைந்து கொள்வதற்கு பெண்கள் அமைப்புகள் துணிவோடு முன்வரவில்லை” என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்தார்.  

மட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வில் பெண்களுக்குப் மேடையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவர், நேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“மேடையில் ஏறுவதற்கு அனந்தி சசிதரன் வேண்டுகோளை முன்வைத்திருந்தார். ஆயினும் எமது தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவின் தீர்மானத்தின்படி தமிழ் மக்கள் பேரவையிலுள்ள அங்கத்தவர்களைத் தவிர வேறு எவரும் எழுக தமிழ் மேடைப் பேச்சுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.   

“சிங்களத் தலைவர்கள் உட்பட வேறு கட்சித் தலைவர்களும் மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.  

“அனந்தி, யாழ்ப்பாணத்தில் வைத்தே தான் மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஆனால் அதற்கு தாங்கள் மறுத்து விட்டதாகவும் தமிழ் மக்கள் பேரவை வடக்குப் பிரிவால் எனக்கு அறிவிக்கப்பட்டது.  

“அனந்தி மட்டக்களப்புக்கு வருகை தருகின்றார், மேடைப் பேச்சுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார் ஆனாலும், அனுமதி இல்லை என்று நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். அதனை அவர் ஏற்றுக் கொண்டுதான் மட்டக்களப்புக்கு வந்து எழுக தமிழ் நிகழ்வுகளில் பங்குபற்றுகின்றார் என்பதையும் எனக்கு அறிவித்தார்கள்.  

“அனந்தி, தனது அமைப்பை தமிழ் மக்கள் பேரவையில் இணைத்துக் கொண்டிருந்தால் அவருக்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்திருக்க முடியும். தமிழ் மக்கள் பேரவையில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களாகத்தான் இணைந்து கொண்டுள்ளார்கள்.  

“மட்டக்களப்பிலுள்ள எத்தனையோ பெண்கள் அமைப்புகளை தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து கொள்ளுமாறு நேரில் சென்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அந்த பெண்கள் அமைப்புகள் எவையும், துணிச்சலோடு முன்வரவில்லை. இந்த அமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு அவர்கள் அச்சத்தோடு இருக்கின்றார்கள்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X