2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'புதிய அரசியலமைப்புத் திருத்த நகர்வு சிறுபான்மையினச் சமூகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 09 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.ஹனீபா

புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின்;  ஒவ்வொரு நகர்வு தொடர்பிலும் சிறுபான்மையினச்  சமூகங்கள் விழிப்பாக  இருக்க வேண்டும் என  கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்  அஹமட்  தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பின்  ஊடாக  சிறுபான்மையினச்  சமூகங்களின்  பாதுகாப்புக்கு  ஏதுவான காரணிகள் தொடர்பில்  மக்களுக்கு  உரிய   தெளிவை   வழங்க வேண்டியது  அரசியல் கட்சிகளினதும்  ஊடகங்களினதும் பிரதான கடமையாகும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், புதிய  எல்லை நிர்ணய முறைமை தொடர்பிலும்  முஸ்லிம்,  தமிழ் சமூகங்கள் மிகுந்த  அவதானத்துடன்  இருக்க வேண்டும் என்பதுடன், இதன் மூலமாக இரண்டு   சமூகங்களுக்கு இடையிலும் இலகுவாக  தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைப்   பெருப்பித்து  பிரித்தாளும் தந்திரத்தை  உபயோகப்படுத்துவதற்கான   சந்தர்ப்பத்துக்கு   ஒருபோதும்  இடமளிக்கப்படக் கூடாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் இன்று (9) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'சிறுபான்மையினச்    சமூகங்களுக்கு அநீதி  இழைக்கப்படாத  வகையிலான  அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு இரண்டு தரப்பினர்களும்    வெளிப்படைத் தன்மையுடன்  பரஸ்பர  முன்னெடுப்புகளை  மேற்கொள்ள வேண்டும்,

நாட்டில்  இடம்பெற்ற  யுத்தம்  மற்றும்  அரசியல் நெருக்கடியான  காலகட்டங்களில்  தமிழ், முஸ்லிம்  சமூகங்கள் பல   இழப்புகளைச்  சந்தித்துள்ளதால்,  இனிமேலும்  அவர்களுக்கு  இழப்புகள்  ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதை   இரு  சமூகங்களும் வேண்டி நிற்கின்றன' என்றார்.

'மேலும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான  பொதுமக்களின்  காணிகள் இன்னும்   இராணுவத்தால்  ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளாகவே   உள்ளதுடன், அவற்றில் மக்களின் பாரம்பரியக்  காணிகளும் அடங்குவதால் குறித்த  காணிகள் விடுவிக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்ட  எல்லை நிர்ணயத்தினால்  சிறுபான்மையின மக்களுக்கு  எந்தளவு தூரத்துக்கு சாதகமான  சூழ்நிலை  உள்ளது  என்பது    தொடர்பில் கேள்விகள்  உள்ளன' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .