2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'200 மில்லியன் மக்களுக்கு வேலை இல்லை'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 05 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

உலகளாவிய ரீதியில் 200 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பற்ற நிலையிலுள்ளனர். இவர்களில் 05  சதவீதமானவர்கள்; இலங்கையைச் சேர்ந்தவர்களாக உள்ளனரென ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் திட்ட இணைப்பாளர் கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில்  நான்கில் ஒரு பகுதியினர் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வார்களெனவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டு 70ஆவது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டும் இலங்கையானது ஐ.நா.வில் இணைந்து 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்  டேபா மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்வின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '2000ஆம் ஆண்டு 100 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லாத நிலையிருந்தனர். ஆனால், 2015ஆம் ஆண்டு அது 57 மில்லியனாக குறைந்துள்ளது. அத்துடன், உலகளாவிய ரீதியில் 2014ஆம் ஆண்டு 90 மில்லியன் சிறுவர்கள் நிறை குறைந்த சிறுவர்களாக இருந்தனர்' என்றார்.

'உலகளாவிய ரீதியில் காணப்படும் யுத்தம், வறுமை, அவசரகால நிலைமை உள்ளிட்ட பல காரணங்களினால் சிறுவர்களுக்கு தரமான கல்வியை பெறமுடியாத நிலைமை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன' எனவும் அவர் தெரிவித்தார்.

'இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின்;; பல அமைப்புகள் பல்வேறு சேவைகளை ஆற்றிவருவதுடன், இந்த அமைப்புகள் யுத்தம், சுனாமி ஆகிய அனர்த்தங்களின்போது  சேவைகளை ஆற்றியுள்ளது. அத்துடன், தமது அமைப்புகளினூடாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பல்வேறு பணிகளை ஆற்றிவருகின்றது.

'மிலேனியம் அபிவிருத்தித்திட்டம்' என்ற பெயரில் 2015ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டுவரை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு பணிகள் இலங்கையில் ஐ.நா. வினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1990ஆம் ஆண்டு முதல் 2015வரை சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் 2.1 பில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையானது மலிவான நம்பகமான  மின்சக்தியை பெற்றுக்கொள்வதற்கு உதவுகின்றது. சோளர் மற்றும் காற்றின் மூலமாக மின்சாரத்தை பெறுவதற்கு ஊக்குவிக்கின்றது.

மேலும், நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்குமான திட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுவருகின்றது' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X