2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'மட்டக்களப்பின் 2 கிராமங்கள் அம்பாறையுடன் சேர்க்கப்பட்டதன் காரணம் என்ன?'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மத்திய அரசாங்கமும் நல்லாட்சி என்று கூறி இணக்கப்பாடு அரசியல் நடத்துகின்ற இந்த ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்கள் அம்பாறை மாவட்டத்துடன்  சேர்க்கப்பட்டதற்கான காரணம் என்ன? இதுதான்  நல்லாட்சியா? என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வியெழுப்பினார்.  

மட்டக்களப்பின் எல்லை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கைகள், குடியேற்றங்கள என்றும் பல பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்திடம் இன்று வெள்ளிக்கிழமை கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பை பொறுத்தவரையில் கிரான், செங்கலடி பிரதேச  செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மாதவணை, மயிலத்தமடு, சின்ன மாதவன ஆகிய இந்த பிரதேசங்கள் பல நூற்றாண்டு காலமாகவும்  வரலாற்று ரீதியாகவும்  மட்டக்களப்புக்கு உரிய எல்லை கிராமங்கள் ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேசத்துக்கு உரிய எல்லை என்று தான் வரைபடத்தில் இருக்கின்றது.
ஆனால், கடந்த 5 வருடங்களாக மாதவணை மற்றும் மயிலத்தமடு ஆகிய இந்த இரண்டு கிராமங்களும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்கு  உட்பட்டதையடுத்து, இந்த கிராமங்களில் இராணுவம் நிலைகொண்டமையால் இந்த இரண்டு இடங்களும் அம்பறை மாவட்டத்துக்கு உட்பட்ட மகாஓயா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதி என வரையறுத்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது எந்த அளவுக்கு நியாயம் என்பது தெரியவில்லை. ஆனால், சட்டவிரோத

பயிர்ச்செய்கைகளும் பெரும்பான்மையினக் குடியேற்றங்களும் திட்டமிட்டு செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இந்த அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் மற்றும் எல்லை  தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டு  பரிபூரண ஆதாரத்துடன் வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இந்த 2 இடங்களும்  மகாஓயா  பிரதேச செயலாளர் பிரிவுக்கு எவ்வாறு மாற்றப்பட்டது? இதற்கு யார் பொறுப்பு? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மத்திய அரசாங்கமும் நல்லாட்சி என்று கூறி இணக்கப்பாடு அரசியல் நடத்துகின்ற இந்த ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்கள் அம்பாறை மாவட்டத்துடன்  சேர்க்கப்பட்டதற்கான காரணம் என்ன? இதுதான் நல்லாட்சியா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகளைப் பொறுத்தவரையில் நல்லாட்சி என்று  கூறிக்கொண்டு மத்திய அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளுவது மட்டக்களப்பு - செங்கலடி பிரதேசங்களுக்குரிய எல்லை கிராமங்களை, மகோயா பிரதேச செயலகத்துக்கு மாற்றுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

எமது மண்ணையும் எமது நிலத்தையும் எமது வரையறுக்கப்பட்ட எல்லையையும் பாதுகாக்க வேண்டியது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. இதற்காகத்தான் அவர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த கடமையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகிவிட்டதா? இது மட்டக்களப்பு எல்லைக்கு உரிய கிராமம் என உறுதி செய்து அந்த அத்துமீறிய பெரும்பான்மையினக் குடியேற்றத்துக்கு  ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது தமிழர்களுடைய நிலம். ஆகவே, உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X