2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இரும்பு பேருந்து வீட்டுத்திட்டம் பொருத்தமற்றது'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 02 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சால் முன்மொழியப்பட்ட 65 ஆயிரம் இரும்பு பேருந்து வீட்டுத்திட்டம் பொருத்தமற்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு சீமெந்துப் பக்கெட்டுகளை கையளிக்கும் நடவடிக்கை அப்பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த  இரும்பு பேருந்து வீட்டுத்திட்டமானது எமது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 65 ஆயிரம் வீடுகள்;, இரும்பு பேருந்து வடிவில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இரசாயனக் கலவையாலும் பேருந்துப் பாகங்களாலும் குறைந்த உயரத்தில்; அமையும் இந்த வீடுகளில்   வெப்பம் அதிகரித்துக் காணப்படும். இந்த வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு பொருத்தமற்றதாகும். குறிப்பாக, வெப்பமான காலத்தில்; இந்த வீடுகளில்; மக்கள் குடியிருப்பது  சிரமமாகும். எனவே, இந்த வீடுகள் எமது சூழலுக்கு பொருத்தமற்றதாகும்' என்றார்.

'ஓர் இரும்பு பேருந்து வீட்டுக்கான மொத்தச் செலவு 21 இலட்சம் ரூபாய் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையைக் கொண்டு  கல், மண், சீமெந்தினால் அமைக்கும்போது இரண்டு வீடுகளை அமைக்க முடியும் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது வடக்கு, கிழக்கில் மாகாணங்களில் ஒரு  இலட்சத்து 37 ஆயிரம் வீடுகள் தேவையாகவுள்ளன. அவ்வாறாயின், 65 ஆயிரம் பேருந்து வீடுகளுக்குரிய செலவைக் கொண்டு எமது மக்களுக்கு பொருத்தமான வகையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுத்து அம்மக்களின் வீட்டுத்தேவையை பூர்த்திசெய்ய முடியும்.

எனவே,  இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் மக்களுக்காக கொண்டுவரப்படும்போது, எமது பிரதேசங்களில் உள்ள வளங்களைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும் என்பதுடன், அம்மக்கள் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு வீடுகள் அமைய வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X