2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

15 வயதில் மகன் காணாமல் போனான்: தாய்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 21 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்

தனது மகன் காணாமல் போகும்போது அவருக்கு 15 வயது எனவும் அவரைத் தேடி வருவதாகவும் காணாமல் போன மகனின் தாயான தவராஜா சந்திராவதி என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். 

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் கிழக்கு மாகாணத்தில்  வியாழக்கிழமை  (20) ஆரம்பிக்கப்பட்டன. இந்த விசாரணைகளின் முதலாவது அமர்வு ஏறாவூர்ப்பற்றில் அமைந்துள்ள செங்கலடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

குடும்பக் கஷ்டத்தால் தனது மகன் பாடசாலைக்கு போகாமல் கூலி வேலை  செய்துவந்தார். இந்நிலையில், தனது மகனை இராணுவத்தினர் கடத்தியதாகவும் அவர் கூறினார்.

காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறும் கதறி அழுது ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இத்தாய் சாட்சியமளித்தார்.

இதேவேளை களுவன்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தங்கராசா  என்பவர் இங்கு சாட்சியமளிக்கையில்,

தனது பிள்ளைகள் இருவரை, விடுதலைப் புலிகள் இருந்தபோது கருணா அம்மான் தலைமையிலானவர்கள் வந்து வலுக்கட்டாயமாக போராட்டத்துக்கு அழைத்துச்; சென்றதாகவும் அவர்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

12 மற்றும் 17 வயதுகளை உடைய தனது பிள்ளைகளை இவ்வாறு கொண்டுசென்றதாகவும்  வீட்டுக்கு ஒரு பிள்ளை தேவை என்று கூறியே இவ்வாறு கொண்டுசென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரவிச்சந்திரன் ஜீவராணி என்பவர் சாட்சியமளிக்கையில்,

தனது 18 வயது மகன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால்  2007ஆம் ஆண்டு கடத்தப்பட்டு சில தினங்களில் விடுவிக்கப்பட்டார். ஆனால், விடுவிக்கப்பட்ட சில தினங்களில் தனது மகன் மீண்டும் கடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

தவராஜா உத்திரை என்பவர் இங்கு சாட்சியமளிக்கையில்,

தனது கணவர் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி காணாமல் போனார். அவர் மாடுகளை விற்கும்  தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவர்; மாடு பார்ப்பதற்குச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் பிடிக்கப்பட்டதாகவும் பிடிக்கப்பட்ட பின்னர் படை முகாமுக்குச்  சென்று தனது கணவரை விடும்படி கோரினேன். இதற்கு நாளை கணவரை விட்டுவிடுவதாக அந்த படை முகாமிலிருந்த அதிகாரி தெரிவித்தார்.  பின்னர் அடுத்த நாள் சென்று விசாரித்தபோது தன் கணவரை படையினர் பிடிக்கவில்லை என அதே அதிகாரி தெரிவித்தாகவும் அந்த பெண் கதறி அழுது ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X