2026 மே 14, வியாழக்கிழமை

dd

விமான நிலைய விஸ்தரிப்பால் பாதிக்கப்பட்ட வலையிறவு மெ.மி.த.க.பாடசாலைக் கட்டத்துக்கு நிதியொதுக்க வேண்டு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 22 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ரி.லோஹித்)

மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பினால் வளங்களை இழந்திருந்த மட்டு. வலையிறவு மெதடிஸ்தமிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான விசேட திட்டத்தின் கீழ்  நிதி ஒதுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

'மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்டு. வலையிறவு மெதடிஸ்தமிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையும் இதற்குரிய காணியும் மற்றும் புதூர் விக்கினேஸ்வரா வித்தியாலயமும் இதற்குரிய  காணியும் மைதானமும் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குடியிருப்புக் காணிகள், கோவில்கள்,   மயானம் ஒரே தடவையில் 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வலையிறவு விமான நிலையத்திற்காக அரசாங்கத்தால்  சுவீகரிக்கப்பட்டு பாரிய விமான நிலையமாக மாற்றப்பட்டது.  

இக்காணிகளுக்கான சுவீகரிப்பிற்கு அரசாங்கத்தால் நஷ்டஈடும் புதூர் பாடசாலைக்கு பதிலாக எல்லையில் புதிய பாடசாலையும் கோவிலுக்குரிய நஷ்டஈடும் வழங்கப்பட்டன.

புதூர் பாடசாலையின் மைதானமும் வலையிறவு பாடசாலையும் மயானமும் விமான நிலைய எல்லைக்குள்ளேயே இருந்து வந்தன.  இதில் விமான நிலையத்தின் அனுமதியுடன் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் இடையூறுகளின்  மத்தியில் தமது தேவைகளை நிறைவுசெய்து வந்தனர்.

இச்சுவீகரிப்புக் காரணமாக வலையிறவு பாடசாலை மாணவர்களின் வரவு குறைவடைந்ததுடன்,  பலர் இடம்பெயர்ந்தனர். பல மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு  மாறிச்சென்றனர். இந்த நிலையில் பாடசாலையின் நடவடிக்கைகள் குறுகிக்குறுகிச் சென்றன.

யுத்தம் ஓய்ந்து மக்கள் ஜனநாயக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ள இத்தருணத்தில் வலையிறவு, திமிலைதீவு, புதூர், சேத்துக்குடா, வீச்சிக்கல்முனை ஆகிய பகுதிகளிலுள்ள பொதுவமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மீன்பிடிச்சங்கங்கள் எடுத்துக்கொண்ட விடா முயற்சியின் பயனாகவும் அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள்,  விமான நிலைய அதிகாரிகளின் முயற்சியாலும் புதூர் மைதானத்திற்கும் வலையிறவு பாடசாலைக்கும் எல்லைப்புறத்தில் உள்ள விமான நிலையக் காணிகள் வழங்கப்பட்டு விமான நிலையத்துக்கு வெளியில் இவை செயற்படத் தொடங்கின.

இதன் இறுதிக்கட்டமாக கடந்த வாரம் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், கல்வி வலய அதிகாரிகள், கிராமத்தவர்கள்,  பாடசாலையை வெளியில் ஆரம்பிக்க முடிவு செய்து  தற்காலிக சிறிய வகுப்பறைக்கட்டிடம், மலசலகூடம், சுற்றுவேலி அமைத்து கடந்த வாரம் பாடசாலை திறக்கப்பட்டு பாடசாலை மிகவும் சிறப்பாக செயற்படுகின்றன.

அதிபர், ஆசிரியர், கிராமத்தவர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்காக புதிய உற்சாகத்துடன் செயற்படுகின்றனர். இதன் காரணமாக மாணவர்களின் வருகை அதிகரித்து புதிய மாணவர்கள் இணைவும் அதிகரித்துள்ளன.  இது தொடர்பாக இப்பாடசாலைக்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கும் இதன் ஏனைய தேவைகள் தொடர்பாகவும் நான் கிழக்கு மாகாண சபையில் கல்வி தொடர்பான விவாதத்தின்போது முன்வைத்த கோரிக்கையை ஏற்ற கல்வி அமைச்சர், நிதி ஒதுக்கித் தருவதாக உறுதியளித்ததோடு தொலைபேசி ஊடாகவும் 25 இலட்சம் நிதி ஒதுக்குவதாக கூறினார். இதற்காக அமைச்சருக்கு எனது பாராட்டையும் தெரிவித்திருந்தேன்.
இருப்பினும் இதுவரைக்கும் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. கடந்த வாரம் இது தொடர்பாக வினவியபோது 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு அரைகுறையில் உள்ள  கட்டிடங்களை முடிப்பதற்கு மட்டும் மத்திய அரசு பணித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. குறிப்பிட்ட 20 சதவீதமே புதிய கட்டிடங்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகப்பற்று அற்ற தகவல் ஊடாக தெரியவருகின்றன.

1874ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட 32 பாடசாலைகளில் இப்பாடசாலையும் ஒன்றாகும். இப்பாடசாலை மெதடிஸ்தமிஷனினால் பராமரிக்கப்பட்டது. 1962ஆம் ஆண்டிற்குப் பின் அரசாங்கம் இப்பாடசாலையை பொறுப்பெடுத்தது.
புதிய கட்டிடம் அமைப்பதற்கு நிதியொதுக்குவது இல்லை என்ற முடிவு இப்பாடசாலைக்கு பொருத்தமானதல்ல. ஏனெனில் யுத்த காலத்தில் சிக்குண்டு கடந்த வாரம்தான் புதிய இடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் தற்காலிகமாகவே கட்டிட நிர்மாணப்பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

இப்பாடசாலையின் கல்வி வளம்பெற வேண்டுமாயின் நிரந்தர நிர்மாணத்திட்டம் அவசியம். ஆகவே இப்பாடசாலைக்கு விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி புதிய கட்டிடம் நிர்மாணிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0

  • Iya Sunday, 22 January 2012 11:56 PM

    தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .