2026 மே 14, வியாழக்கிழமை

dd

சுதந்திர தினத்தில் விடுவிக்கப்படும் சிறைகைதிகளில் தமிழ் அரசியல்கைதிகளும உள்வாங்கப்பட வேண்டும்: பா.அர

Kogilavani   / 2012 ஜனவரி 22 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி ஜனாதிபதியால் விடுவிக்கப்படவுள்ள 4000 சிறைக்கைதிகளில் விசாரணைகள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் உள்வாங்கப்பட்டு விடுதலை செய்யப்படுவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எழுதியுள்ள கடிதத்தின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 4000 அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது தொடர்பில் மிக மகிழ்ச்சியடைகின்றோம்.

ஒரு நாட்டின் ஜனநாயக ஐக்கிய குடியரசின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான அதிகாரம் அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது.

அதனடிப்படையில் இன்று இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் இந்த பொதுமன்னிப்பு விடுதலையில் உள்ளடக்கபடுவார்கள் என்று தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த நாட்டில் யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் பல்வேறு சிறைகளில் அரசியல் கைதிகளாகவுள்ளோர் தொடர்பில் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் தமிழர்கள்; பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இன்று சிறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கவீனர்களும், 37 பெண்களும், கைக்குழங்தைகளுடன் மூன்று பேருமாக ஒட்டுமொத்தமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல்கைதிகள் உள்ளனர்.

தற்போது இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்து சுமுகமான நிலை நிலவும் இந்த வேளையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்வது தொடர்பில் ஜனாதிபதியாகிய நீங்கள் நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இன்று சிறைகளில் உள்ளவர்களின் குடும்பங்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதுடன் சிலர் தங்களது குடும்பங்களையும் இழந்த நிலையில் உள்ளனர்.

சிறு குற்றங்கள் செய்தோர், தண்டப்பணம் விதிக்க முடியாதோர், குற்றம்புரிந்தோர் நன்னடத்தை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும்போது எதுவித குற்றமும் புரியாமலும், சந்தேகத்தின் அடிப்படையிலும், தண்டனை விதிக்கப்பட்டு தண்டனைக் கைதிகளாக 15, 20 வருடங்களாக சிறையில் உள்ளோரை விடுதலைசெய்வதில் எதுவித தயக்கங்களையும் காட்டக்கூடாது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று உலக நாடுகள் கூட பெரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர். நாங்களும் எதிர்பார்ப்புடனேயே உள்ளோம்.

இதில் எதுவித ஏமாற்றமும் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிறந்த முடிவை எடுப்பீர்கள் என நம்புகின்றோம்.
 


  Comments - 0

  • sutha Sunday, 22 January 2012 10:17 PM

    உங்கள் பாதை வெற்றிபெற வாழ்த்துக்கள் தலைவா. இப்படி ஒவோரு தமிழனும் பாடுபட்டால் எமது தமிழ் இனத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .