2026 மே 06, புதன்கிழமை

கட்சியை வைத்து பட்டதாரிகளை ஏமாற்ற வேண்டாம்: மட்டு. பட்டதாரிகள் சங்கம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 29 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
 
கட்சியை வைத்துக்கொண்டு பட்டதாரிகள் எவரையும் ஏமாற்ற வேண்டாம். நாங்கள் பல அரசியல்வாதிகளிடம் பட்டதாரிகள்  குறித்து கலந்துரையாடியுள்ளோம். ஆனால் எவரும் தங்கள் கட்சியில் இணையுங்கள் எனக் கூறவில்லை  என மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
அண்மையில் பட்டதாரிகள் தொடர்பில் ஏற்பட்ட குழப்பமான நிலைமை தொடர்பில் அச்சங்கம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
 
'அரசாங்கத்தினால் பட்டதாரிகளுக்கு காலம் காலமாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அனைவருக்கும் நியமனம் வழங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். இதற்கு மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
 
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிகமான பட்டதாரிகள் வேலையற்று உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நியமனங்கள் வழங்க ஆவன செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக 2000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்று உள்ளனர்.
 
இவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பட்டம் முடித்தவர்கள். இப்பட்டதாரிகள் உண்ணாவிரதம், கவனயீர்ப்புப் போராட்டங்கள் பலவற்றை செய்து பலவழிகளிலும் முயன்று கஷ்டப்பட்டு எதுவிதமான முடிவுகளும் இன்றி வாழ்க்கையின் விரக்தியில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் மட்டக்களப்பு பட்டதாரிகள் சுதந்திர கட்சியில் இணைந்துள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் கல்குடா தொகுதி பட்டதாரிகள் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு என பட்டதாரிகள் சங்கம் இயங்கி வருகிற நிலையில் இச்சங்கம் எந்த ஒரு கட்சியிலும் இணையவில்லை என்பதுடன் இச்சங்கம் எந்தக் கட்சிக்கும் உரியதும் அல்ல என்பதை அறியத்தருகிறோம்.
 
அத்துடன், சுதந்திரக்கட்சியில் இணைந்தால் தான் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என கூறுவது ஜனநாயகத்துக்கு முரணான விடயமாகும். இதுவரைகாலமும் இல்லாத இக்கொள்கை தற்போது எதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
 
கட்சியை வைத்துக் கொண்டு பட்டதாரிகள் எவரையும் ஏமாற்றிவிடவேண்டாம். நாங்கள் பல அரசியல்வாதிகளிடம் பட்டதாரிகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம். ஆனால் எவரும் தங்கள் கட்சியில் இணையுங்கள் எனக் கூறவில்லை. ஆனால் தற்போது சுதந்திரக்கட்சியில் இணைந்தால் தான் நியமனம் எனக் கூறுவது பட்டதாரிகளை ஏமாற்றுகின்ற விடயமாக அமையக்கூடாது.
 
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையின் கீழ் 30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நியமனங்கள் முறைகேடாக அமையாது. அனைத்து பட்டதாரிகளுக்கும்  ஆண்டு அடிப்படையிலும் வயதை அடிப்படையாகக் கொண்டும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கம் அனைத்து ஆளும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடம் தயவாக வேண்டிக்கொள்கிறோம். அத்துடன் இதனை ஏற்று நிறைவேற்றுவீர்கள் என பட்டதாரிகள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்'  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .