2026 மே 06, புதன்கிழமை

மட்டு. விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதுவிடின் அகிம்சைப் போராட்டம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்  தீர்த்துவைக்கப்படாதுவிடின் அகிம்சை வழியில்  போராட்டங்களை நடத்த வேண்டி ஏற்படுமென மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இப்பிரச்சினைகளினால் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.  மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் தவறுமாயின் நாடு தழுவிய ரீதியில் தேசிய ரீதியாகவுள்ள விவசாயிகளுடன் இணைந்து விமோசனத்தை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம், நெல் சந்தைப்படுத்தும் வசதி, விவசாய திணைக்கள வசதி,  விதைநெல் போன்ற ஒழுங்குகளை செய்துகொடுக்காமை மற்றும்  விவசாயிகளுக்கு மாடு வழங்காமை போன்ற பல்வேறு பிரச்சினைள் காணப்படுகின்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 152,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் 52,000 ஏக்கர் விவசாய நிலத்துக்கு மாத்திரமே நீர்ப்பாசனம் கிடைக்கின்றது. ஏனைய விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்காது அவை தூர்ந்துபோகும் நிலைமை உருவாகியுள்ளது.

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 'நாம் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்' என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்களை தீர்த்து வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதுள்ள நீர்ப்பாசன குளங்களின் மூலம் அரைவாசி நிலங்களுக்கு கூட நீர் வழங்க முடியாதுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நவகிரி, உன்னிச்சை, உறுகாமம், வாகனேரி போன்ற  குளங்களை விசாலப்படுத்தி நீர்ப்பாசனத்துக்கு உதவியளிப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் விவசாய அபிவிருத்திக்காக பணத்தை செலவு செய்கின்றபோதிலும், அதன் நன்மையை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.  தற்போதைய எரிபொருள் விலையேற்றம் விவசாயிகளையும் பெரிதும் பாதித்துள்ளது. மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படுகின்றது. ஆனால் விசாயிகளுக்கு உழவு இயந்திரம் போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படவில்லை.
கிழக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் எதிர்காலத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிவரும்.  இச்சவால்களை அரசாங்கம் மற்றும் விவசாயத் திணைக்களம் தீர்த்து வைக்க வேண்டும்' என்றார்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் கே.மகாலிங்கம், அதன் உறுப்பினர் மகிந்தராஜன், அகில இலங்கை விசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் என்.சரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .