2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பு வாவி தொடர் சுற்றி வளைப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகளும் தோணிகளும் சிக்கின

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


மட்டக்களப்பு வாவி தொடர் சுற்றி வளைப்பில் இன்றும் புதன்கிழமையும் சுமார் எட்டு இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகளும் தோணிகளும் சிக்கியதாக மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

பங்குடாவெளி – புலையாவெளி மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு தோணிகள் மற்றும் கடலில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமாக மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் பெறுமதியான வீச்சு வலை, தங்கூசி வலை, முக்கூட்டு வலை, இழுவை வலை, மடி வலை, டிஸ்கோ வலை, நாய் வலை என்பனவற்றைத் தமது கடற்தொழில் பரிசோதகர்களும் கடற்றொழில் கிராமிய அமைப்பினரும் இணைந்து கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

இவற்றின் பெறுமதி சுமார் எட்டு இலட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவை இன்று உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விடும் என்றும் அவர் சொன்னார்.

சட்டவிரோத தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் நீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க அழிக்கப்படும் அதேவேளை கைப்பற்றப்பட்ட தோணிகள் அரசுடமையாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சுற்றிவளைப்பில் ஈடுபட்டுவரும் மாவட்ட கடற்றொழில் உத்தியோகத்தர்களான ஏ.ஏ.பரீட், ஜே.ஏ.ராஜ்குமார், ரீ.பாலமுகுந்தன் மற்றும் மாவட்ட கடற்றொழில் மீனவ சம்மேளனத் தலைவர் சிறில் அன்டன் ஆகியோரும் இன்றைய சுற்றி வளைப்பில் கைப்பற்றப்பட்ட மீன்பிடி சாதனங்களை நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக நீதிமன்றம் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடற்றொழில் நீரியல் வளங்கள் மாவட்டத் திணைக்களத்தினால் வாவியிலும் கடலிலும் சட்டவிரோதமான மீன்பிடியை நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம். இதில் ஒரு கட்டமாக ஏறாவூர் நகரம் ஏறாவூர்ப்பற்று பன்குடாவெளி சொறுவாமுனை வாவி மட்டக்களப்புப் பிரதேசங்களிலே தங்கூசி வலை, முக்கூட்டு வலை, இழுவை வலை, மடி வலை, டிஸ்கோ வலை, நாய் வலை என்பனவற்றைத் தடைசெய்வதற்காக இந்த தொடர் சுற்றி வளைப்புக்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்தப் பணிகளிலே கடற்றொழில் பரிசோதகர்களும் கிராமிய கடற்றொழில் அமைப்பினரும் மாவட்ட மீனவர் சம்மேளனத்தினரும் எமக்கு உதவி வருகின்றார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட மீன்பிடி சாதனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின் அவை அரசுடமையாக்கப்படும். மீனவ மக்களின் நன்மை கருதியே தாங்கள் இந்த சுற்றி வளைப்புக்களை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளதால் இந்தச் சட்டவிரோத மீன்பிடிக்கு எவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X