2026 மே 01, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பொதுச்சந்தை, உணவு விடுதிகள் மற்றும்  நடமாடும் உணவு வாகனங்களில் நேற்று புதன்கிழமை மாலை இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, 

பொதுச்சுகாதார பரிசோதகர்களும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட இச்சோதனை நடவடிக்கையின்போது  பாவனைக்குதவாத பெருமளவான மரக்கறி வகைகள், இறைச்சி வகைகள், பழுதடைந்த உணவுப்பொருட்கள், பழங்களை பழுக்கவைப்பதற்காக பாவிக்கப்படும் தடைசெய்யப்பட்ட இரசாயனப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சுகாதாரமற்ற முறையில் இயங்கிய நடமாடும் உணவு வண்டிகளையும் கைப்பற்றியுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன.

இப்பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்தோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கூறினர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஏனைய வர்த்தக நிலையங்கள், உணவு விடுதிகள், நடமாடும் உணவு வண்டிகள் ஆகியவற்றில் தொடர்ந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கோட்டைமுனை பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் த.மணிமாறன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்களான சி.சகாதேவன், வா.ரமேஸ்குமார் ஆகிய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பிரிவினரும் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .