2026 மே 07, வியாழக்கிழமை

இஸ்லாமிய மார்க்கம், கோட்பாடுகள் பற்றி பேச எவருக்கும் உரிமை இல்லை: அமீர் அலி

Menaka Mookandi   / 2013 மார்ச் 20 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மார்க்க விடயங்களையும், இஸ்லாமிய கோட்பாடுகளையும் பற்றி கருத்துக் கூறுவதற்கு பொது பலசேனா அமைப்புக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் கொங்ரிட் வீதிகள் மற்றும் வடிகான்களை அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் ஆசிரியர் ஏ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமீர் அலி, 'இன்று பொது பல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் மார்க்க விடயங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது. ஹலால், முஸ்லிம் பெண்களின் அபாயா மற்றும் புனித அல் குர்ஆன் போன்ற இஸ்லாமிய மார்க்க விடயங்களில் முஸ்லிம் சமுகத்தின் மனம் நோகும்படி அவ்வமைப்பு தொடர்ந்து ஈடுபட்டால் அதற்காக அவர்கள் மோசமான விளைவுகளை எதிர்க்கொள்ள வேண்டியநிலை ஏற்படும்' என்று கூறினார்.

'எங்களின் மார்க்க விடயங்களை யாருடைய அபிலாஷைகளுக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. மார்க்க விடயங்களை இவர்களுக்காக விட்டுக் கொடுத்துப் பேசுவதற்கு நான் தயாருமில்லை.

இந்த நாட்டைப் பொறுத்தவரை மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசியல் ஆட்சிக் காலத்தின் போதும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இப்பிரச்சினைகளை நாங்கள் அரசியலுக்காக சமூகத்தை அடகுவைக்க ஒருபோதும் தயாரில்லை' என்றார்.

'முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிராக சவால்கள் விடப்படுமாக இருந்தால் அதனைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். சமூகத்தைக் காட்டிக்கொடுத்து அரசியல் செய்யவேண்டிய எவ்விதத் தேவையும் எமக்குக் கிடையாது. இதனால் நாங்கள் பொது பல சேனா அமைப்பினரைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை' என்றும் அமீர் அலி சுட்டிக்காட்டினார்.

'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சிங்களப் பிரதேசங்களில் முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக நாங்கள் மௌனியாக இருக்கின்றோம். நாங்கள் மௌனியாக இருக்கின்றோமே தவிர அது அரசியல் ஏலாத் தன்மையன்ற கருத்தல்ல.

இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் வேறு எந்த இனத்தினதும் மார்க்க விடயங்களில் கை வைத்ததும் கிடையாது. எந்த இனத்திற்கு எதிராகவும் ஆயுதங்கள் ஏந்தி போராட்டம் நடத்தவுமில்லை. இஸ்லாம் மார்க்கம் போதித்துள்ள சாந்தி, சமாதானம், இன ஐக்கியம், நாட்டின் இறைமை, மக்களின் சம உரிமை என்பவற்றினைக் கடைப் பிடித்தே முஸ்லிம் சமூகம் இன்றுவரை வாழ்ந்துகொண்டு இருக்கின்றது என்பது சகலரும்; அறிந்த விடயம்.

ஆனால் முஸ்லிம்களின் எந்த விடயத்தினையும் அறியாத இவர்கள், பொது பல சேனா எனும் அமைப்பை தொடங்கிக்கொண்டு முஸ்லிம்களின் மார்க்க விடயங்களைப்பற்றிக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

  Comments - 0

  • vallarasu Wednesday, 20 March 2013 04:08 PM

    சும்மா இப்படி மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்காமல் செயலில் செய்து காட்டுங்கள்.

    Reply : 0       0

    Sa... Wednesday, 20 March 2013 05:41 PM

    "அன்றய‌ கிறிஸ் பூதங்கள்"... அன்று த‌மிழர்களூக்கு இன்று முஸ்லிம்களுக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .