2026 மே 04, திங்கட்கிழமை

ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் இன்னமும் முற்றுபெறவில்லை: இந்திரகுமார் பிரசன்

Kogilavani   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 'உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீதான தாக்குதல்; மற்றும் பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறு போன்ற நிகழ்வுகள் நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

'கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகம் தாக்கப்பட்டு ஒரு சில நாட்களின் பின்னர் உதயன் பத்திரிக்கை அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் ஜனநாயக விரோத செயல்களாகும். மேற்படி  சம்பவங்களுடன்  தொர்புடைய நபர்கள் இன்னமும் இனந்தெரியாத நபர்களாகவே உள்ளனர்.

அரசாங்கத்தின் இராணுவம் மற்றும் பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை. இதனை உற்றுக் கவனிக்கும் போது மக்களின் பாதுகாப்பு என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவே இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.

மேலும் பிபிசி தமிழோசை வானொலி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அலைவரிiயூடாக இதுவரை காலமும் தனது நிகழ்ச்சிகளை இலங்கையில் ஒலிபரப்புச் செய்துவந்தது.

போர் காலத்தில் அதன் நிகழ்ச்சிகளுக்கு உள்நாட்டில் இடையூறு ஏற்படுத்தப்பட்டமை போல் போர் ஓய்ந்துள்ள தற்போதைய அமைதிச் சூழ்நிலையிலும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்கள் ஊடகத்துறைக்கும் ஊடகவியவாளர்களுக்கும் இன்னுமின்னும் அச்சுறுத்தல் இருப்பதையே காட்டுகிறது. இவ்வாறு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை இந்த நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

பிபிசி உலக சேவை தானாகவே இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடான தனது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளது.

இதன்மூலம் மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .