2026 மே 06, புதன்கிழமை

கொரியாவிலிருந்து பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்: பெற்றோர் வேண்டுகோள்

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையிலிருந்து தமது பிள்ளைகளை வேலை வாய்ப்புக்காக தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ள பெற்றோர் தற்போது ஏற்பட்டுள்ள கொரிய நெருக்கடியின் விளைவாக கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளார்கள்.

யுத்த நெருக்கடிகள் தொடங்குவதற்கு முன்னர் எப்படியாவது தங்களது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என்று அவர்கள் அழுதபடி வேண்டி நிற்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் பல இளைஞர்கள் தென் கொரியாவில் தொழினுட்பம் சார்ந்த தொழில் வாய்ப்புப் பெற்று அங்கு சென்றிருக்கின்றார்கள்.

இவர்களின் பெற்றோர் தற்சமயம் வட-தென் கொரிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்து வருவது கண்டு கலங்கிப் போயுள்ளார்கள்.

ஏறாவூரிலுள்ள ஆதம்பாவா சித்தி நஜீமா எனும் தாய் 24 வயதுடைய இப்றாஹிம் பைறூஸ் எனும் தனது புதல்வனை நினைத்து தினமும் கண்ணீர் வடிப்பதாகக் கூறுகின்றார்.

'என் மன நிலை பதறிக் கொண்டிருக்கின்றது. யுத்தம் தொடங்கினால் அந்த நாட்டிலிருந்து வந்து சேரமுடியாது. அதற்கு முன்னர் எப்படியாவது தனது மகன் வந்து சேர்ந்து விட வேண்டும்' என்று ஏங்குகின்றார்.

உயிர் இருந்தால் பின்னர் சம்பாதித்துக் கொள்ளலாம். பாதுகாப்பான இடத்திற்கு எமது பிள்ளைகளை அனுப்புவார்கள் என்றுதான் நம்பிக்கொண்டிருக்கின்றோம். யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் எமது பிள்ளைகளை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றார்.

'எங்களுக்கு எதுவுமே தெரியாமல் இருக்கின்றது அவர்கள் எதுவுமே சொல்கின்றார்கள் இல்லை. என்று கொரியாவிலுள்ள தனது மகன் கூறுவதாகவும் ஏதும் பிரச்சினை என்றால் எமது நாட்டுக்கு உயிரைத் தப்பி ஓடி வந்து விடு என்று தனது மகனிடம் தான் அறிவுறுத்தியிருப்பதாகவும் எப்படியிருந்தாலும் எனது மன நிலை பதற்றமாகத் தான் உள்ளது'  என்று கூறுகின்றார் தனது மகனைக் தென் கொரியாவுக்கு அனுப்பியுள்ள தந்தை எம்.எம். இப்றாஹிம்.

நாமும் நேரடியாக யுத்தத்தை அனுபவித்தவர்கள். விமானக் குண்டுத் தாக்குதல்கள், கண்ணிவெடிகள், ஷெல்லடிகள், துப்பாக்கிச் சூடு இவற்றையெல்லாம் கண்ட அந்தப் பயங்கரம் மனதில் வாட்டுகின்றது.

எமது பிள்ளைகளைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதே சிறந்தது என்று அழுகையுடன் கூறுகின்றார் தனது மகனைத் தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ள மற்றொரு தாயான ஏறாவூரைச் சேர்ந்த ஹச்சி முஹம்மது சகீலா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .