2026 மே 04, திங்கட்கிழமை

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் இம் மாதத்துக்கான அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

அமர்வின் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவசரப்பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

விவாதத்தின் இறுதியில் பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விவாதத்தின் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் 2010ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற பாலர் பாடசாலைகளை மாகாண சபையின் கீழ் கொண்டு வந்து நெறிப்படுத்துவதற்கு பாலர் பாடசாலை பணியகம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக நியதிச்சட்டம் முன்வைக்கப்பட்டது.

அது தொடர்பில் விவாதிக்கப்பட்டு ஏகமானதாக நிறைவேற்றப்பட்டு தற்சமயம் செயல்வடிவம் பெற்று வருகின்றது.

தனியார் பாடசாலைகளைத் தவிர கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலைகளும் அதன் ஆசிரியர்களும் இப்பாலர் பாடசாலை பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, மேலும் இவ் ஆசிரியர்களில் எவ்வித கொடுப்பனவுகளும் பெற்றுக் கொள்ளாதவர்களின் விபரங்களும் தொகுக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

ஆனால், இப் பாடசாலையில் தற்போது எந்த வித கொடுப்பனவும் இன்றி ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பது பரிதாபகரமானதே. அத்தகையோரின் பிரச்சினைகள் மனிதாபிமான அடிப்படையில் முன்னுரிமை அளித்து தீர்த்து வைக்கப்படவேண்டும்.

எந்தக் கொடுப்பனவும் இல்லாத இந்த ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிகின்றேன். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, எதிர்வரும் மே மாதத்திலிருந்தாவது, இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க இச்சபை வழி செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இப்பிரேரணைக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்கள்.

இதனையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .