2026 மே 04, திங்கட்கிழமை

விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பில் விசேட கவனம்: சதீஸ்குமார்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

விசாரணைகள் இன்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் விசாரணை செய்ய வேண்டும் என்கின்ற போராட்டத்திலே கடந்த வருடம் சிறைக்கைதிகள் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது அரசாங்கத்தின் சார்பாகவும் அமைச்சின் சார்பாகவும் அந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய கைதிகளிடம் நான் நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன்.

கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

சிறைக்கைதிகளோடு நாங்கள் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் கைதிகள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அத்தோடு வழக்குகளுக்கு முகம் கொடுக்காத கைதிகளை துரிதமாக விசாரணை செய்வதற்கும் முடிவெடுக்கப்பட்டது.

அதற்காக விசேட நீதிமன்றங்களை அமைத்து நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கும் புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு சட்ட மா அதிபர் திணைக்களத்தோடும் பாதுகாப்பு அமைச்சோடும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

அதன் பிரதிபலிப்பாக கொழும்பு, அநுராதபுரம், மன்னார் ஆகிய பகுதிகளில் கிடப்பிலிருந்த வழக்குகள் துரிதமாக விசாரிக்கப்பட்டு அந்தக் கைதிகளுக்கு ஓராண்டு புனர்வாழ்வும் வழங்கப்பட்டு வருகின்றது.

இப்படிப்பட்டவர்களிலுள்ள சிலர் விடுதலையாவார்கள்.

தற்போது வெலிக்கடை, மகஸின் மற்றும் அநுராதபுரம் போன்ற சிறைச்சாலைகளில் இருக்கின்ற எஞ்சியோர்; வழக்குகளை எதிர் கொண்டுள்ளனர்.
சிலருக்குச் சாட்சியங்கள் இல்லாத அல்லது பகுப்பாய்வுத் திணைக்களத்தின் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்படாத பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதன் காரணமாக அவர்களுடைய விடுதலை தாமதமாகியிருக்கின்றது.

இருந்தாலும் அவர்களது வழக்குகளையும் துரிதமாக விசாரித்து அவர்களை விடுதலை செய்வதற்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சு தொடர்ச்சியாக நீதியமைச்சோடு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றது. அதன் பிரதிபலனை மிக விரைவாக எதிர்பார்க்கலாம் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .