2026 மே 06, புதன்கிழமை

தொழுகைக்காக பள்ளிவாசல் செல்வோர் தலைக்கவசம் அணிய தேவையில்லை: பொலிஸ்

Menaka Mookandi   / 2013 மே 10 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'மோட்டார் சைக்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். எனினும் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்கான பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை' என மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் தெரிவித்தார்.

காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலில் இன்று நடைபெற்ற ஜும் ஆ தொழுகையின் பின்னர் பொதுமக்களுக்கு உரையாற்றுகையிலேயே மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், 'சட்டம் என்பது எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் ஒன்றுதான் ஆனால் காத்தான்குடியின் சூழலையும் மனிதாபினமானத்தையும் வைத்து இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை வைத்து அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. காத்தான்குடியில் வெள்ளிக்கிழமைகளில் 12 மணி முதல் பிற்பகள் 2மணி வரை ஜும் தொழுகைக்கு செல்வோருக்கு மாத்திரமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு ஏனைய நேரங்களில் மோக்ட்டர் சைக்கிளில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் செல்லக்கூடாது.

மோக்ட்டர் சைக்கிளில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் சென்றால் பொலிசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள், அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த நாம் அனைவரும் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும். அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த பொலிஸார் ஒரு போதும் பின் நிற்கமாட்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை வஸ்த்து விற்பணை மற்றும் அதன் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும். அதற்காக மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன். அண்மையில் கூட காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியில் கூடுதலான கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றினர்.

பொலிசாருக்கு யாரும் இலஞ்சம் கொடுக்க தேவையில்லை. அவ்வாறு எந்தவொரு பொலிஸ் உத்தியோகஸ்தராவது மட்டக்களப்பு மாவட்டத்தில் இலஞ்சம் பெற்றால் ஊழல் செய்தால், அல்லது மோசடி செய்தால் நாங்கள் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

பொதுமக்கள் பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்து பழக்க கூடாது. எதையும் நாம் சட்ட ரீதியாக அனுக வேண்டும். மட்டக்களப்பில் பொலிசார் இலஞ்சம் பெற்று ஊழல் செய்தால் உடனடியாக எனக்கு அறிவியுங்கள்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் விடயத்தில் நான் கவனமாக இருப்பேன். எனது பொலிஸ் பதவிக்கு விசுவாசமாக கடமையாற்றி வருகின்றேன்' என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இதில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர, மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .