2026 மே 14, வியாழக்கிழமை

dd

'கிழக்கு பல்கலையின் திருமலை வளாகத்தை ரஜரட்டவுடன் இணைப்பதை அனுமதிக்க முடியாது'

Kogilavani   / 2013 ஜூலை 14 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது' என மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படப்போவதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.

அவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது.

இதை மட்டக்களப்பு சிவில் சமூகம் வன்மையாக எதிர்ப்பதுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படக் கூடாது என்பதை ஜனாதிபதி, உயர்கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.

கிழக்குப் பலக்லைக்கழக அபிவிருத்தியில் மட்டக்களப்பு சிவில் சமூகம் அக்கறையுடன் இருக்கின்றது. சிவில் சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிழக்கு பலக்லைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் எப்போதும் உண்டு.

வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டக்களப்புக்கு வருகை தரும்போது மட்டக்களப்பில் அனைவராலும் மதிக்கப்படுகின்ற ஆயர் அவர்களை சந்திக்க வேண்டும். ஆனால் அண்மையில் மட்டக்களப்புக்கு வருகை தந்த வெளிநாட்டுத்தூதுவர் மற்றும் வெளிநாட்டு இராஜ தந்திரிகள் ஆயரையோ அல்லது மட்டக்களப்பு சிவில் சமூகத்தையோ சந்திக்கவில்லை.

கடந்த 30 வருட கால யுத்தத்தின்போது மட்டக்களப்பில் மக்களுக்கு சமயப்பிரமுகர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை.

அதனால் இங்கு வரும் அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்கள் ஆயரை சந்திப்பதுதான் ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது.

எனவேதான் மட்டக்களப்புக்கு வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டக்களப்பு ஆயரையும் சிவில் சமூகத்தினரையும் சந்திக்க வேண்டும் என்பதை எமது சிவில் சமூக அமைப்பு வலியுறுத்துகின்றது.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பானது சமூக நலன் சார்ந்த அமைப்பாகும். இது மட்டக்களப்பு குரலாக வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 26000 குடும்பங்கள் உள்ளன. அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் 6000 பேர் உள்ளனர்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை இடைவிலகள் 42 வீதமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  இவற்றை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் நாம் விசேடமாக கல்வியை முன்னேற்றுவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .