2025 மே 05, திங்கட்கிழமை

இந்து ஆலயங்களின் பிரச்சினையை தீர்க்க புதிய பொறிமுறை: மேஜர் ஜெனரல் லால்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், வ.சக்திவேல்


கிழக்கு மாகாண இந்து ஆலயங்கள், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாளுவதற்கான புதிய பொறிமுறைகளை பேணவுள்ளதாகவும், தம்முடன் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகத் தொடர்புகளைப் பேணமுடியும் என்றும் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பேரேரா தெரிவித்தார்.

வெலிக்கந்தையிலுள்ள இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு மாகாணத்தின் இந்து ஆலயங்கள் மற்றும் இந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் இந்து நிறுவனங்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளும், கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களின் கட்டளைத் தளபதிகளும், சிவில் பாதுகாப்பு இணைப்பதிகாரிகளும், ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையில், கிழக்கு மாகாணத்தின் இந்து ஆலயங்கள், நிறுவனங்கள், மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகள், காணி உரிமங்கள், கலாசார சீரழிவுகள் ஆகியவற்றின் மூல காரணங்களை பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

அதேநேரம் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சமூகம், சமயம் சார்ந்த செயற்திட்டங்களில் இராணுவத்தினரின் பங்களிப்புகள், சேவைகள், கடந்த காலங்களில் இராணுவம் சார்ந்தும் பாதுகாப்புத் தரப்பு சார்ந்தும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட இந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள், அண்மைக்காலமாக கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்பு, ஆலயங்களின் உடைப்பு, இந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கலாசாரப் பிறழ்வுகள்சார் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படையாக தம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இதில், இராணுவத்தின் சார்பில் மட்டக்களப்பு 23ஆவது பிரிக்கேட்டின் கட்டளைத் தளபதி அத்துல கொடுப்பிலி, திருமலை 22ஆவது பிரிக்கேட்டின்  கட்டளைத் தளபதி பிரியந்த விக்கிரமரத்ன, அம்பாறைக் கட்டளைத் தளபதி ஹரேன் பெரேரா மற்றும் சிவில் பாதுகாப்பு இணைப்பதிகாரிகள்,இந்து நிறுவனங்களின் சார்பில் சுவாமி மகேஸ்வர சைத்தன்னிய, கனகசபாபதி குருக்கள், இந்து சேவா சங்கத்தின் எஸ்.சுதர்சனன் ஐயர், இந்து ஆலயங்களின் மட்டு அம்பாறை ஒன்றியத்தின் தலைவர் ஞா.துரையப்பா, பொருளாளர் எஸ்.மகேந்திரன், பிரச்சாரச் செயலாளர் சி.தியாகராஜா, இந்து ஆலய அறநெறிப் பாடசாலைகளின் ஒன்றியத்தின் தலைவர் பி.ஜெயரெட்ணம், விஸ்வ ஹிந்து பரிசத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் வி.கமலதாஸ் மற்றும் பல முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X