
-தேவ அச்சுதன்,-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய நிதி மூலம் கணவனை இழந்து பெண் தலைமை தாங்கும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் வகையில் சுயதொழில் உதவி கடந்த வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அதிதிகளாக மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார், கிழக்கு இந்து ஒன்றிய செயலாளர் கதிர் பாரதிதாசன், பேரவை பிரதி நிதிகளான திருமதி ஜோ.ஞானசூரியம், ச.ஜெயலவன், ச.ஜெயகரன், க.ரகுநாதன், எஸ்.நளிதரன், ந.குகதர்சன், இ.தேவகுமார், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து பிரதேச செயலாளர் மூலம் பெறப்பட்ட தகவலின் படி பத்துப் பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இவ்உதவிகளாக பால் கறக்கும் பசு மாடு ஏழு பேருக்கும், அரிசி அரைக்கும் இயந்திரம் மூன்று பேருக்கும் கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால் வழங்கப்பட்ட 597,503 ரூபா நிதி மூலம் ஏழு மாடு கொள்வனவிற்கு 465,000 ரூபாவும், மூன்று அரிசி அரைக்கும் இயந்திரக் கொள்வனவிற்கு 129,000 ரூபாவும், ஏனைய செலவாக 3,503 ரூபாவுமாக செலவிடப்பட்டதாக பேரவை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் கணவனை இழந்து பெண் தலைமை தாங்கும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் வகையில் சுயதொழில் உதவிகளை பலமுறை வழங்கி உள்ளதுடன், அத்தோடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி விருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்உதவியை வழங்கி வைத்த லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினருக்கு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும், உதவி பெற்றுக் கொண்ட பயனாளிகளும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
