2025 மே 01, வியாழக்கிழமை

பெண்கள் தொழுவதற்கான மஸ்ஜித் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கலாசார மத்திய நிலையம் மற்றும் ஹிஸ்புல்லா மண்டபம் அமைந்துள்ள பகுதியில் பெண்களுக்கு தொழுவதற்கான மஸ்ஜித் ஒன்றை அமைப்பதற்காக அனுமதி வழங்குமாறு கோரி காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் தலைவியுமான சல்மா ஹம்ஸா காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்திற்கு வைபவங்களுக்காக வருகை தரும் பெண்கள் தொழுது கொள்வதற்கு இடவசதியொன்று இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

கலாசார மண்டபத்தில் நடைபெறும் சிறுவர் கலை விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிற்பகள் 2.30மணிக்கு வரும் பெண்கள் மூன்று நேர தொழுகையை நிறைவேற்ற சந்தர்ப்பமில்லாமல் வீடு செல்கின்றனர்.

இதனால் பெண்கள் தொழுகையை கழா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்

இந்த நிலையை கருத்திற் கொண்டு ஏற்கனவே இந்த இடத்தில் பெண்கள் தொழுது கொள்வதற்காக சிறிய அளவிலான மஸ்ஜித் ஒன்றை அமைப்பதற்கு தங்களிடம் அனுமதி கேட்டிருந்தேன்.

அதற்கான அனுமதியை நீங்களும் அதே போன்று காத்தான்குடி பிரதேச செயலாளரும் வழங்கியிருந்தனர்.
 
ஆனால் பின்னர் அந்த இடத்தில் பெண்கள் தொழுவதற்கான இடத்தினை அமைப்பதற்கு அனுமதி மறுத்து விட்டீர்கள்.

இந்நிலையில் அதற்காக பெறப்பட்ட நிதியினை கொண்டு அல்லாஹ்வின் கிருபையினால் பெரிய மௌலானா கபுறடி பள்ளிவாயல் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் அங்கு பெண்களுக்கான தொழுகை அறை ஒன்றை நிர்மாணித்துள்ளோம்.

எனினும் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்திற்கு வருகை தரும் பெண்கள், மற்றும் அந்த வளாகத்திலுள்ள நகர சபையில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அத்தோடு நூலகத்தில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் தொழுவதற்கு அந்த இடத்தில் இடமொன்றில்லாமல் சிரமப்படுவதாக என்னிடத்தில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதை கருத்திற்கொண்டு காத்தான்குடி கலாசார மத்திய நிலையம் மற்றும் ஹிஸ்புல்லா மண்டபம் அமைந்துள்ள பகுதியில் பெண்களுக்கு தொழுவதற்கான மஸ்ஜித் ஒன்றை அமைப்பதற்காக அனுமதி வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இதற்காக ஒரு சிறியளவிலான ஒரு இடத்தினை தந்து பெண்களுக்கான தொழுகை அறையொன்றை அமைப்பதற்கு அனுமதியை தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்' என அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகளை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி  ஜம் இய்யத்துல் உலமா சபை மற்றும் காத்தான்குடி  பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .