2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீட்டு வன்முறை தொடர்பாக அதிகமான முறைப்பாடு

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


வீட்டு வன்முறை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக தேவை நாடும் மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேவை நாடும் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் அறிவூட்டும் செயலமர்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நேற்று தினம் நடைபெற்றது.

தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி தர்மரஞ்சன் சங்கீதா தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தேவை நாடும் அமைப்பின் சட்ட உதவியாளர் சட்டத்தரணி திருமதி அருள்வாணி சுதர்சன் மற்றும் உளவளத்துணையாளர்களான தீபா மற்றும் நந்தினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது,  ' 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையில் வீட்டு வன்முறைகள் தொடர்பில் தேவை நாடும் மகளிர் அமைப்பிடம் 719 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நட்புறவு இல்லத்தில் உள்ள தேவை நாடும் மகளிர் அமைப்பின் இடர்முகாமைத்துவ நிலையத்தில் 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் உள்ளன.

வீட்டு வன்முறைகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் முறைப்பாட்டின் அடிப்படையில் பாதிப்புக்குள்ளாக்கியவரை அழைக்கும்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.

இதனால் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் குடும்பம் பாதிப்புக்குள்ளாகின்றது. இதன்காரணமாக அதிகளவு தற்கொலை முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அவ்வாறு வெளிநாடு சென்றவர்கள் மீது எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலையே ஏற்படுகின்றது.

இந்த ஆண்டு காலப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட தாபரிப்பு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட 60
பேருக்கு பாதுகாப்பு கட்டளை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .