2025 மே 01, வியாழக்கிழமை

மங்கள ராமய விகாராதிபதி செயற்பாட்டுக்கு பட்டிருப்பு சு.கஅமைப்பாளர் கண்டனம்

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வைத்து மட்டக்களப்பு மங்கள ராமய விகாராதிபதி நடந்து கொண்ட விதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பட்டிருப்பு சுதந்திர கட்சி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தர்ப்பவாத சாதுவின் அட்டூழியங்களை வன்மையாக கண்டிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மங்கள ராமய விகாராதிபதி பட்டிப்பளை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பட்டிப்பளை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து  மிலேச்சத்தனமான, காட்டுமிராண்டித்தனமான முறையில் பிரதேச செயலரை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரை தாக்க முயன்றும், அங்கிருந்த அரச உடமைகளை சேதப்படுத்தியும் உள்ளார்.

இவர் துறவி வேடத்தில் உலாவரும் பெரும் மாயக்காரர், பயங்கரவாதி என்பது இலங்கை மக்களுக்கு தெரியும். பொதுமக்கள் சொத்துக்களை அழிப்பது தேச துரோக குற்றமாகும்., அதுவும் மக்களின் தேவைகள் அறிந்து கண்ணியமாக சேவை செய்யும் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகஸ்தர்கள் மீது நடாத்தப்படும் இப்படிப்பட்ட செயற்பாடுகளை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற குடியேற்றங்களில் மேற்படி சாதுவின் பாரிய பங்கு இருப்பது தெட்டத்தெளிவு. இவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண அளுனர் மற்றும் கிழக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட செயலாளர், பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். மேலும் இந்த சந்தர்ப்பவாத சாதுவின் இந்த சம்பவத்தை அரசியல் மயமாக்கி சந்தர்ப்பவாத அரசியல் மேற்கொள்ள வேண்டாமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .