2025 மே 02, வெள்ளிக்கிழமை

ரிதிதனையில் கட்டப்படும் பல்கலைக்கு த.தே.கூ. கண்டனம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

'மாவட்டத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் வெளிநாட்டு நிதியினைக் கொண்டு அரபு மொழியினைப் போதிக்கும் தனியார் பல்கலைக்கழகக் கல்லூரியினை அரசாங்கத்திடம் கொள்வனவு செய்து, அதனை  மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதனையில் கட்டி அதற்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி எனப் பெயர் வைப்பதனை எம்மால் அனுமதிக்க முடியாது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது' என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா செவ்வாய்க்கிழமை (18) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் நாட்டில் 25 பல்கலைக்கழகக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக 2012க்கான  வரவு செலவுத் திட்டத்தின் போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டது. அதில் 5 பல்கலைக்கழகக் கல்லூரிகளை தனியார் அமைப்புக்களுக்கு வழங்குவதாகவும் மீதி உள்ள 20 பல்கலைக்கழகக் கல்லூரிகள் மாவட்டம் தோறும் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறாக ஜனாதிபதியின் திட்டம் இருக்கும்போது, எமது மாவட்டத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் வெளிநாட்டு நிதியினைக் கொண்டு அரபு மொழியினைப் போதிக்கும் தனியார் பல்கலைக்கழகக் கல்லூரியினை அரசாங்கத்திடம் கொள்வனவு செய்து, அதனை  மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதனையில் கட்டி அதற்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி எனப் பெயர் வைப்பனை எம்மால் அனுமதிக்க முடியாது.
இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவர்கள் இந்த தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு அரபுப் பெயரையோ அல்லது எந்தப் பெயரையோ வைக்கலாம். அதற்கு நாங்கள் தடையல்ல. ஆனால் இவர்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி என்று பெயர் வைக்க முடியாது. இந்த நடவடிக்கையினை பார்க்கின்றபோது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அரச பல்கலைக்கழகக் கல்லூரி வருவதற்கு இவர்கள் தடை விதிக்கப்போகின்றார்களோ? என எண்ணத்தோன்றுகின்றது.

'உயர்தர மாணவர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பாடநெறியை பயிலும் உயர்தர மாணவர்களில் 2016 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்களை தவிர ஏனைய மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு விண்ணப்பித்து தங்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டு இலகுவாக கூடிய வேதனத்துடன் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளுதலும், இவர்கள் வேலைவாய்ப்புக்காக அரசாங்கத்தினை நம்பியிருக்க கூடாது என்பதே'  ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனைக்கூடான திட்டமாகும்.

அப்படியிருக்கும்போது இக் கல்வியினை பயிலும் மட்டக்களப்பு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இவர்களின் தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு பணம் கொடுத்து படிக்க வாருங்கள் என்பதற்கான கவர்ச்சிக்காக மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி எனப் பெயர் வைக்க மக்களின் பிரதிநிதியான எம்மால் அனுமதிக்க முடியாது.

கடந்த 30 வருட யுத்தம் காரணமாக எமது மாவட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு கடந்த காலத்தில் பொருத்தமான கல்வியோ மற்றும் வேலைவாய்ப்போ வழங்கப்படவில்லை. இதனால் வேலையற்றோர் கூடுதலாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இலவசமாக மூன்றாம் நிலைக் கல்வியினை வழங்கும் நடவடிக்கையினையே மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளோமா பாடநெறி இலவசமாக நடத்தப்படுவதுடன் வறுமையான மாணவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா உதவு தொகையினை அரசாங்கம் வழங்குகின்றது. அப்படியிருக்கும் போது இதே டிப்ளோமா பாடநெறிக்கு இவர்களின் தனியார் பல்கலைக்கழகக் கல்லூரி ரூபா 230,000 கட்டணத்தில் விண்ணப்பம் கோரியுள்ள விளம்பரத்தினை பார்த்தேன்.

முடியுமானால் எமது மாவட்டத்துக்கு ஒரு அரச பல்கலைக்கழகக் கல்லூரியினை ஏற்படுத்துங்கள். அல்லது தொழிநுட்பவியல் கல்லூரியினை ஏற்படுத்துங்கள். நாங்கள் வரவேற்போம் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கைகொடுக்கும். அப்போது நாம் அதற்கு மட்டக்களப்பு எனும் பெயரை சூட்டலாம். அதுவே எமது தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு செய்யும் கைங்கரியமாகும்' என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X