2025 மே 03, சனிக்கிழமை

யுத்தம் முடிவுக்கு வரப்படுவதால் மாத்திரம் பிரச்சினைகள் முடிந்து விடுவதில்லை: பஷீர்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


இலங்கையில் கடந்த 03  தசாப்தங்களாக இருந்த இனப் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட வேண்டுமென உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதால் மாத்திரம் பிரச்சினைகள் முடிந்து விடுவதில்லையெனவும் அவர் கூறினார்.

கல்குடாத் தொகுதி ஐக்கிய முச்சக்கரவண்டிச்  சாரதிகள் சங்கத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவும் புதிய காரியாலயத் திறப்பு விழாவும் புதன்கிழமை  (26) வாழைச்சேனையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'சிறுபான்மையின மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர்.  இப்பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு அரசாங்கம்  ஒத்துக்கொண்டுதான் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை உருவாக்கியிருக்கிறது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவை உருவாக்கியிருக்கிறபோதிலும் கூட, சிறுபான்மையின மக்களுடைய பிரதானமான கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதில் அங்கம் வகிக்கவில்லை.  பல இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அதில் உள்வாங்கப்படவில்லை.

இந்த நாடாளுமன்றக்குழு முறைமை மீள்பரிசீலனை செய்யப்பட்டு புதிதாக தமிழ் மக்கள் தெரிவுசெய்திருக்கி;ற மாகாண தலைமைத்துவமாக இருக்கின்ற வடமாகாண சபையின் பிரதிநிதிகளும் மூவின மக்களும் சமமாக வாழ்கின்ற கிழக்கு மாகாணசபை பிரதிநிதிகளும் புதிதாக உள்வாங்கப்பட்ட புதிய பேச்சுவார்த்தைக்கான களம் திறக்கப்பட வேண்டும்

ஏனைய கட்சிகளும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்பட்டு உள்ளூரிலேயே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

எனது அரசியல் போராட்டமானது சாதாரண தொழிலாளர்களுக்கான போராட்டமாகவே ஆரம்பமானது. எப்போதும் சமூகத்தில் மிக முக்கியமாக இருப்பவர்களும்; தொழிலாளர்கள்தான். மிக மோசமாக புறக்கணிக்கப்படுபவர்களும் தொழிலாளர்கள்தான். தொழிலாளர்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதற்காகத்தான் எனது 19ஆவது  வயதில் போராடப் போனவன் நான். அந்தக் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமென்பதற்காகத்தான் போராட்டத்தில் பங்கெடுத்தேன்' என்றார்.

முச்சக்கரவண்டிச்  சாரதிகள் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.சபீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கத்தினால் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கௌரவிக்கப்பட்ட அதேவேளை,  இச்சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் 15  பேர் கௌரவிக்கப்பட்டனர்.

முச்சக்கரவண்டிகளுக்கு பிரதேச குறியீடுகள் அடங்கிய ஸ்டீக்கர்கள் ஒட்டப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X