2025 மே 03, சனிக்கிழமை

'ஆணைக்குழு அறிக்கைவிடுவதோடு நின்றுவிடக்கூடாது"

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களைப் போலவே காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் நடவடிக்கையும் அறிக்கை விடுவதோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணமும் பெற்றுக்கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்' என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாட்டில் தீர்மானமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை(2) நடைபெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநட்டின்போது அந்த இயக்கத்தின் ஆலோசனை சபை தலைவர் அமீர் அஸ்ஸெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி மாநாட்டின் தீர்மான பிரகடனத்தை வாசித்தார்.

இதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்டோரினால் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

ஏழு விடயங்களை உள்ளடக்கிய இப்பிரகடனத்தில்; தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1.இந்நாட்டை 30 வருடகாலமாக அழிவுக்ளுள்ளாக்கிய சூழ்நிலைகளுக்கான காரணிகளை கண்டறிந்து அவை இனியொருபோதும் இடம்பெறாது என்பதனை உறுதி செய்வதோடு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான நீதியும் நிவாரணமும் கிடைக்கச் செய்வதன் மூலமாக தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப் படவேண்டும்.

இந்நாட்டின்; பல்லின சமூகத் தன்மையை அங்கீகரித்து சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து மத,கலாசார உரிமைகளையும் சகல சமூகங்களும் எவ்வித இடையூறுகளுமின்றி அனுபவிப்பதனை உறுதி செய்வதன் ஊடாக அர்த்தமுள்ள நிரந்தர சமாதானம்  ஏற்படுத்தப்படவேண்டும்.

2.இன,மதரீதியாக சிறுபான்மை மக்களின் கலாசார தனித்துவம் பாரம்பரியம் மத நம்பிக்கைகள் மற்றும் அனுஷ்டானங்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையில் நடந்தேறிவரும் வெறுப்புணர்வுப் பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீதான வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அதற்கு அவசியமான சட்டரீதியான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறான வெறுப்புணர்வு மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் அல்லது தனிநபர்கள் மீது பாரபட்சமின்றிய சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுபோன்ற வெறுப்புணர்வுப் பிரசாரங்களை தடைசெய்யும் புதிய சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப் படவேண்டும்.

அத்தோடு ஒவ்வொரு மதப்பிரிவினரும் தமது மதஅனுஷ்டானங்கள் மற்றும் கலாசார விவகாரங்களை சுதந்திரமாக கையாள்வதற்கு ஏற்ற தனியான அமைச்சுக்கள் வழங்கப்பட்டு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள மதகலாசார உரிமைகளை அனுபவிப்பது உறுதிசெய்யப்படவேண்டும்.

3.யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க அவர்களது நியாயமான அபிலாசைகளை நிறைவுசெய்யத்தக்க அதேவேளை நாட்டின் ஒருமைப்பாட்டையும் தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யத்தக்க அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப் படவேண்டும்.

அதற்கு முன்னோடியான சகல பேச்சு வார்த்தைகளிலும் பொறிமுறைகளிலும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூக பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டும். அதிகாரப் பகிர்வு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் வரை 13 ஆவது திருத்தசட்ட மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டியங்கும் வகையில் மாகாண சபை கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்படவேண்டும்.

4.யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் ஊழலும் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் இந்நாட்டில் அதி உச்சநிலைக்குச் சென்றிருக்கின்றன. நமது தேசத்தின் நிலையான அபிவிருத்திக்கும் எதிர்கால சுபீட்சத்திற்கும் பயங்கர அபாயகரமான சாபமாக இது மாறியிருப்பதோடு சர்வதேசத்தின் பார்வையில் நம்நாட்டைப் பற்றிய தவறான பதிவுகளை அது ஏற்படுத்தியிருக்கிறது.

இதன்காரணமாக நாட்டின் அபிவிருத்தியின் பிரதிபலிப்புக்களை சாதாரன மக்களின் அன்றாட வாழ்வில் காண முடியவில்லை என்பதோடு வாழ்க்கைச் செலவும் பொருளாதார கஷ்டங்களும் அதிகரித்துச் செல்கின்றன.

இந்த சூழ்நிலைகள் நம்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் ஜனநாயக மற்றும் ஏனைய ஒழுக்க விழுமியங்களின் சிதைவுக்கும் வழிகோலியிருக்கின்றன. பயங்கரவாதத்திலிருந்து நம்நாட்டை மீட்டெடுத்தது போலவே ஊழல் மோசடிமற்றும் அதிகார துஷ்பிரயோகங்களிலிருந்து இந் நாட்டை மீPட்டெடுப்பது தேசப்பற்றுள்ள அனைவரின் தலையாய கடமையாக மாறியிருக்கிறது.

இதற்கான தேசிய வேலைத் திட்டமும் விசேட சட்டங்களும் பொறிமுறைகளும் உருவாக்கப்படவேண்டும். அந்தவகையில் பின்வரும் இரண்டு விடயங்கள் உடனடியாக மேற்கொள்ளப் படவேண்டும்.

பொதுநிதியினைக் கையாளுகின்ற மற்றும் ஏனைய நிர்வாக விடயங்கள் தொடர்பாக முழுமையான தகவல்களை நம் நாட்டின் எந்தவொரு குடிமகனும் தேவைப்படும்போது பெற்றுக் கொள்வதனை உத்தரவாதம் செய்யும் 'தகவலறியும் சட்டம்' உடனடியாக உருவாக்கப்படவேண்டும்.

இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஏற்கனவே நடைமுறையிலுள்ள பொறிமுறைகள் அனைத்தும் உரியநோக்கத்தை நிறைவுசெய்யத் தவறியிருக்கும் நிலையில் இலஞ்ச ஊழல் மோசடி நவடிக்கைகளை கண்காணிப்பதற்கான புதிய சுயாதீன பொறிமுறைகள் உருவாக்கப்படவேண்டும்.

அதில் ஒரு அடிப்படை பொறிமுறையாக ஒவ்வொரு உள்ளூராட்சிமன்ற மட்டத்திலும் சுயாதீன ஊழல் கண்காணிப்பு குழுக்கள் சட்டபூர்வமாக ஏற்படுத்தப்படவேண்டும்.

5.யுத்தகாலத்தின் போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணமக்களின் மீள்குடியேற்றம் நஷ்டஈடு மற்றும் புனர்வாழ்வு என்பன பாரபட்சமின்றியும் துரிதமாகவும் பூர்த்திசெய்யப்படுவதோடு இடம்பெயர்ந்த சகலமக்களும் தமது பூர்வீக இடங்களில் குடியேறி வாழ்வதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படவேண்டும்.

யுத்தகாலத்தின் போது தாம் இழந்த குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை அம்மக்கள் மீளப்பெறுவதனை உத்தரவாதப்படுத்தும் விசேட பொறிமுறையொன்று இதனூடாக உருவாக்கப்படவேண்டும்.

அதனூடாக வடகிழக்கில் இன விகிதாசார அடிப்படையில் அரச காணிகளை ஒவ்வொரு சமூகமும் தமது அபிவிருத்தி மற்றும் குடிபரம்பல் தேவைகளுக்காக பெற்றுக் கொள்வதனை உறுதிசெய்வதோடு வடகிழக்கில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான சகல பிரச்சினைகளிலும் பாரபட்சமின்றியும், இழுத்தடிப்புக்களுமின்றியும் கையாளப்பட்டு தீர்க்கப்படவேண்டும்.

6.யுத்தகாலத்தில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்து நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதானது வரவேற்கத்தக்கது.

சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இது குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்புச் செய்யமுடியும்.
இருந்த போதிலும் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பல்வேறு ஆணைக் குழுக்களைப்போலவே இதனுடைய நடவடிக்கையும் அறிக்கை விடுவதோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணமும் பெற்றுக்கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

காணாமல் போதல் சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் எனக் கருதும் அத்தனை பேரும்; சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும். காணாமல் போனவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்படும் இடங்கள் அனைத்தையும் தோண்டி ஆராய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் உடனடியாகமேற்கொள்ளப்படல் வேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் போதுமான நிவாரணம் உடனடியாக வழங்கப்படல் வேண்டும்.

7.நம்நாட்டை சுபீட்சமும், அமைதியும் நிறைந்த ஒன்றாக கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு உதவிகளையும் முதலீடுகளையும் வர்த்தக  வாய்ப்புக்களையும் எதிர்பார்த்திருக்கும் இத்தருணத்தில் அரசியல் அதிகாரங்களில் இருப்போர் அதிகார துஸ்பிரயோக சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் இந்நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

இது போன்றநம் நாட்டுக்கு கேடுவிழைவிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அதனைமீறி செயற்படுவோரை தண்டிக்கவும் பொருத்தமானநடவடிக்கைகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொள்வதன் மூலமாக இந்நாட்டின் நற்பெயரும்,கீர்த்தியும் பாதுகாக்கப்படல் வேண்டும் என அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X