2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஆணைக்குழுவை நம்புங்கள்: பரணகம

Menaka Mookandi   / 2014 மார்ச் 20 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காணாமல் போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை வையுங்கள். இந்த ஆணைக்குழு, தன்னால் முடிந்த உதவிகளை செய்யும்' என்று மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் கிழக்கு மாகாணத்தில் நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டன. இந்த விசாரணைகளின் முதலாவது அமர்வு ஏறாவூர்ப்பற்றில் அமைந்துள்ள செங்கலடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக வருகை தந்திருந்த மக்களிடம் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர், மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'காணாமல் போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளைச் செய்ய வந்திருக்கின்ற உங்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த ஆணைக்குழு முன்னிலையிலே முன்வைக்கப்படுகின்ற ஒவ்வொரு முறைப்பாட்டையும் தனித்தனியாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதியுத்தம ஜனாதிபதியவர்கள் கட்டளையிட்டிருக்கின்றார்.

இங்கே முறைப்பாடு செய்ய வந்திருக்கின்ற உங்களுக்கு பகிரங்கமாக இந்த இடத்திலே வாக்குமூலம் அளிப்பதற்கு ஏதாவது உள் அச்சம், சங்கடங்கள் இருக்குமாக இருந்தால் நீங்கள் எமது ஆணைக்குழுவிற்கு இரகசியமான முறையிலே சாட்சியங்களையும் முறைப்பாடுகளையும் தெரிவிக்கலாம்' என்றார்.

'காணாமல் போன உங்களது உறவினர்கள் பற்றி நீங்கள் எங்களிடம் முன்வைக்கின்ற முறைப்பாடுகளை நாங்கள் மிகக் கவனமாகவும் ஆழமாகவும் பரிசீலனை செய்து அது விடயமாக உரிய மேல் நடவடிக்கை எடுப்போம். தேவைப்படுமிடத்து மேலதிக விசாரணைகளையும் நடத்தத் தீரமானித்துள்ளோம்.

எனவே இந்த விடயத்தில் நீங்கள் எதுவித அச்சமும் பயமுமின்றி காணாமல் போனோர் சம்பந்தமாக உங்களிடமிருக்கும் சகல தகவல்களையும் எம்மிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்றார்.

'நீங்கள் இந்த ஆணைக்குழுவிடம் வாக்குமூலங்களை அளிக்கும் பொழுது ஏதாவது அச்சுறுத்தல்கள் அல்லது இடையீடுகளை யார் மேற்கொண்டாலும் அதுபற்றி எமக்கு அறியத் தாருங்கள். அவ்விதம் இடையீடுகளை மேற்கொள்வோர் குறித்து நாம் துரிதமாக நடவடிக்கை எடுப்போம்.

உங்களது இந்தத் துயரமான சூழ்நிலையிலே உங்களது நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி, இந்த ஆணைக்குழுவைப் பணித்துள்ளார்கள்.

எனவே ஆணைக்குழு உங்களிடம் கேட்கின்ற கேள்விகளுக்கு எதுவித தயக்கமும் தடையுமின்றி மிகத் தெளிவான பதில்களை நீங்கள் தர வேண்டும். அதன் மூலமாகத்தான் உங்களது துயர நிகழ்வுகளை நாங்கள் சரியாக அறிக்கை செய்து அதன் மூலமாக உங்களுக்கு உதவ முடியும்' என்று அவர் கூறினார்.

'சிலவேளைகளில் நீங்கள் சரியான தகவல்களை எங்களுக்கு வழங்கத் தவறினால் காணாமல் போனவர்கள் பற்றிய எங்களது விசாரணையில் தவறுகள் நேர்ந்து விடலாம். அப்படி ஏதாவது தவறுகள் ஏற்பட்டாலும் அது வேண்டுமென்றே இடம்பெற்ற தவறாகக் கருத முடியாது.

இந்த விசாரணை ஆணைக்குழுவிலே முழு நம்பிக்கை வையுங்கள் எங்களால் உங்களது துயர நிலைமைக்கு உதவக்கூடிய அனைத்தையும் முடிந்தளவு செய்வோம்' என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X