2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் பாடசாலைகள் திட்டமிட்டு புறக்கணிப்பு: புவனேஸ்வரன்

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதோடு இங்கு கடமையாற்றுகின்ற அதிபர், ஆசியர்களும் பழிவாங்கப்படுகின்றனர். அத்தோடு அடக்குமுறை நிர்வாகமே அமுலில் இருப்பதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (21) அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் கடமையாற்றிய தமிழ் உயர் அதிகாரிகளை திட்டமிட்டு வெளியேற்றி பெரும்பான்மை இனம் சார்ந்த அதிகாரிகளே முற்று முழுதாகக் கடமையாற்றுகின்றார்கள். கல்வி அமைச்சுச் செயலாளர், உதவிச் செயலாளரில் ஒருவர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதம எழுதுவினைஞர், கல்விக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர், மேலதிக உதவிக்கல்விப் பணிப்பாளர் அனைவருமே பெரும்பான்மை இனம் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் பெருமளவிலான தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுவதோடு தமிழ் பாடசாலைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. அத்தோடு அடக்குமுறைப் பாணியில் அதிபர்களும் ஆசிரியர்களும் துன்புறுத்தப்படுகின்றனர்.

இது தவிர பாடசாலைகளில் அதிபர்கள் நியமனம், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் நியமனம், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களின் நியமனம் உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிட்ட பழிவாங்கல்களும் புறக்கணிப்புகளும் இடம்பெற்றுள்ளமை ஆதாரங்களுடன் நிரூபணமாகியிருக்கின்றன. இந்நிலையில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திலும் இதுபோன்ற முன்னெடுப்புகள் ஆரம்பித்திருப்பதும் இது இனரீதியிலான ஒடுக்கு முறைக்கு ஒப்பானது என்பதும் வெளிப்படையாக தெட்டத் தெளிவாகின்றது. மீண்டும் இனக்குரோதங்களைத் தூண்டுகின்ற செயற்பாடுகளாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதோடு இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலையீடு செய்து நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். தமிழ் பேசும் உயர் அதிகாரிகளின் பொறுப்புகளைப் பறித்தெடுத்து தமிழ் பாடசாலைகளுக்கு எதுவுமே செய்யவிடாமல் தடுத்து அரசியல் ரீதியிலான செல்வாக்குகளை மாகாணக் கல்விப்பணிப்பாளர் பிரயோகிப்பது அவரது பதவிக்குரிய காரியமல்ல. ஏற்கனவே இதுபோன்ற காரியங்களில் அவர் ஈடுபட்டு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்மையையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பொருத்தமில்லாத ஏராளமான படிவங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுமைகளைக்கூட்டி, மாகாணக் கல்வித்திணைக்களம் செய்யவேண்டிய வேலைகளை பாடசாலைகளில் சுமத்துவது பொருத்தமில்லாதது. இதைவிட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு வருகின்ற அதிபர்கள் ஆசிரியர்களுக்கு பதில்கூறும் அளவிற்கு பொறுப்புவாய்ந்த எவரும் கடமையில் இல்லாதிருப்பதும் மாகாணக் கல்வித்திணைக்களத்தின் அசமந்தப் போக்குகளை வெளிப்படுத்துகின்றது.

இதைவிட இடமாற்ற சபைகூடி தீர்மானிக்கப்பட்ட அதிபர்கள், ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் இடைநிறுத்தியிருப்பது அடக்கு முறையின் இன்னுமொரு வெளிப்பாடு. அதிபர்கள் ஆசிரியர்களுக்கு அவசியமில்லாத படிவங்களைக் கொடுத்து அதில் அவசியமில்லாத கேள்விகளைக் கேட்டு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மறைமுகத் திட்டமொன்றைத் தீட்டுவது அம்பலமாகியுள்ளது. இது தமிழ்பேசும் அதிபர்கள், ஆசிரியர்களை ஓரங்கட்டி தமிழ் பிள்ளைகளின் கல்வியை அழிக்கும் திட்டம் என்றே நாம் கருதுகின்றோம். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரும்பான்மையான தமிழ்ப் பாடசாலைகளைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் இவ்வாறானதொரு அடக்கு முறையைப் பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்பதனை புரிந்து கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம். இச்செயற்பாடுகளை இலங்கை ஆசிரிய சங்கமும் வன்மையாகக் கண்டிப்பதாக அச்சங்கத்தின் கிழக்கு மாகாணச் செயலாளர் சி.ஜெயராசா தெரிவித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X