2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு லட்ச ரூபா கப்பம் கொடுத்தும் விடுவிக்கவில்லை

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாவது அமர்வின் சாட்சியங்கள் தலைவர்  மெக்ஸவல் பராக்கிரம பரணகம முன்னிலையில் இன்று (22.) மட்டக்களப்பில் பதிவு செய்யப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பரிவிலிருந்து ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு காணாமல் போனோர் தொடர்பில் விண்ணப்பம் செய்த 52 பேருக்கு  சாட்சியங்களை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.காணாமல் போன தமது பிள்ளைகளை கண்டு பிடித்து தருமாறு அழுது கொண்டு பல தாய்மார் ஆணைக்குழு முன்னிலையில் கண்ணீர் மல்க சாட்சியங்களை வழங்கினர்.
 
கடத்தப்பட்ட எனது மகனை விடுவிப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபா பணம் கப்பமாக கேட்டு பணத்iதை வழங்கியும் எனது மகன் இதுவரை விடுவிக்கப்படவில்லை என மல்லிகா தேவி எனும் தாய்  ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போது கண்ணீர் மல்க கூறினார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில்

நாங்கள் மட்டக்களப்பு பழுகாமத்தில் வசித்து வந்தோம் யுத்தத்தினால் அங்கிருந்து இடம் பெயர்ந்து மட்டக்களப்பு கல்லடியில் வசித்து வந்தோம்.எனது மகனின் பெயர் இரத்தின சிங்கம் கேதீஸ்வரன் கால் நடை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக கடமையாற்றிவந்ததுடன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களையும் நடத்தி வந்தார்.

காணாமற்போன 29வயதான எனது மகன் 01.01.2009 அன்று  மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போது களுவாஞ்சிகுடி இராணுவ முகாமுக்கு முன்னால்  வைத்து இராணுவத்தினரால் கடத்தப்படார்.

எனது மகன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை. எனது மகனை தேடி பல இடங்களுக்கும் சென்றேன். அப்போது மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாமுக்கு சென்று முகாமிலுள்ள கெப்டன் சிவா என்பவரை சந்தித்தேன்.
உமது மகனை அடித்து கை மற்றும் கால் என்பன உடைக்கப்பட்டுள்ளன அவரை நீங்கள் பார்ப்பதற்கும் அவரை விடுவிப்பதற்குமாக இரண்டு லட்ச ரூபா பணம் தர வேண்டும் என கூறினார்.அப்போது நாங்கள் ஐம்பதாயிரம் ரூபா பணத்தினை கொடுத்தோம். பின்னர் மகன் கொழும்பிலுள்ளதாக தெரிவித்தார்.

அங்கு மகனை பார்ப்பதற்காக நானும் எனது கணவரும் எனது சகோதரனும் கொழும்புக்கு கெப்டன் சிவாவுடன் சென்றோம். அங்கு எங்களை ஒரு லொட்ஜில் விட்டு சென்றார்.பின்னர் எங்களுக்கு தொலை பேசியில் மிகுதி பணத்திணை தருமாறு கூறப்பட்டது.
கொழும்பில் முச்சக்கர வண்டியில் அலைந்துதிரிந்து இந்த அலுவல்களை பார்ப்பதற்காக மேலும் இரண்டாயிரம் ரூபா கேட்கப்பட்டது. அந்த பணத்தையும் கொடுத்தோம்  எங்களை யாருடனும்  தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டாம் எனவும் கூறப்பட்டது.

பணத்திணை இராணுவ கப்டன் சிவா என்பவரே வாங்கி எடுத்தார். ஆனால் ஏமாற்றத்துடன் கொழும்பிலிருந்து ஊர் திரும்பினோம் மகனை இது வரையில் நாம் பார்க்கவில்லை. எனது மகனை கண்டு பிடித்து தாருங்கள்.
எனது மகனுக்கும் வெல்லாவெளி பிரதேச சபையின் அன்றைய தவிசாளராக இருந்தவருக்கமிடையில் முரண்;பாடுகள் இருந்ததாகவும் அறிவேன்.எனக்கு ஐந்து பிள்ளைகள் எனது கணவர் சிற்றூழியராக கடமையாற்றி ஓய்வூதியம் பெறுகின்றார்.எனது குடும்ப நிலை மிகவும் கஸ்டமாகும் என மல்லிகா தேவி எனும் தாய் தெரிவித்தார்.

இது வரை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 2500 பேர் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.ஏ.ஹெலி தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X