2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

எல்லாச் சமூகங்களுக்கும் மட்டு. பல்கலை கல்லூரி சொந்தம்

Suganthini Ratnam   / 2014 மே 13 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி அனைத்துச் சமூகங்களுக்கும் சொந்தமான பல்கலைக்கழக கல்லூரியாகுமென இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இலங்கையில் முதல் தடவையாக  காத்தான்குடியில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி செவ்வாய்க்கிழமை  (13) திறந்து வைக்கப்பட்டது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியானது தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட கல்லூரியாகும்.
'மஹிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தின் கீழ், நாடாளவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 25 பல்கஇலைக்கழக கல்லூரிகளில் அரசு மற்றும் தனியார் துறையின் இணைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாவது பல்கலைக்கழக கல்லூரி இந்த மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியாகும்.

இன, மத, மொழி வேறுபாடின்றி இந்தப் பல்கலைக்கழக கல்லூரி செயற்படும். இந்த நாட்டில் இன ரீதியாக பாடசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பாடசாலை என்றும் சிங்களப் பாடசாலை என்றும் முஸ்லிம் பாடசாலை என்றும் உள்ளன.  இவை இன ரீதியாக பிரித்துக் காட்டுகின்றன
அவ்வாறில்லாமல், அனைத்தும் ஒரே இனம். ஒரே பாடசாலை. இலங்கை மக்கள் என்ற சிந்தனை எமக்கு இருக்க வேண்டும்.

இதேபோன்று, நீலம் என்றும் பச்சை என்றும் சிவப்பு என்றும் கொடிகளை வைக்காமல் இலங்கை தேசியக் கொடியென அனைவரும் ஒன்றுபடவேண்டும். நாம் அனைவரும் இலங்கையர்கள்.

இலங்கைக்கு அரபு நாடுகள் பூரண ஒத்துழைப்பையும்; உதவிகளையும் வழங்குகின்றன.  ஜெனீவாவில் இலங்கைக்கு அரபு நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி இலங்கையை ஆதரித்தன. அரபு நாடுகள் பொருளாதார ரீதியான உதவிகளையும் இலங்கைக்கு வழங்குகின்றன.

இக்கல்லூரியானது தொழில் நிபுணர்களை உருவாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக தொழிற்சந்தையில் தேவைகளுக்கமைய அத்தேவைகளை பூர்த்திசெய்வதை நோக்காகக் கொண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உயர் டிப்ளோமா பாடநெறிகளை மிகச் சிறப்பாக பூர்த்தி செய்யவும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்; இணைந்து பட்டப்படிப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்லூரி சிறந்த தொழில் தகைமையுள்ளவர்களை இந்த நாட்டில் உருவாக்குமென்று   நம்புகின்றேன்.

மேலும், இந்தக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கடுமையாக உழைத்துள்ளார். அவரது சிறப்பான முயற்சி இன்று வெற்றியளித்துள்ளது. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒரு சிறந்த சேவையாளர். அவரின் திறமைகளை நான் பாராட்டுகின்றேன்.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி இவ்வளவு துரிதமாக திறக்கப்படுமென நான் நினைக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு இதற்காக ஒப்பந்தம் செய்தபோது, இதற்கு காலம் எடுக்குமென  நான் நினைத்தேன் ஆனால், இன்று வேகமாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் திறக்கப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். எனது ஒத்துழைப்பும் உதவியும் என்றும் இதற்காக உண்டு.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை எனது அமைச்சுக்கு பிரதியமைச்சராக நியமிக்க இருந்தபோதுதான், அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவரது அமைச்சுக்கு பிரதியமைச்சராக்கினார். எனது அமைச்சின் பிரதியமைச்சராக ஹிஸ்புல்லாஹ் இருந்திருந்தால், அந்த பொறுப்பையும் சிறப்பாகச் செய்திருப்பார்' என்றார்.

இந்நிகழ்வின்போது, டலஸ் அழகப்பெருமவுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதி அரேபியாவின் றாபியத்துல் ஆலமி நிறுவன முக்கியஸ்தர்கள் பொன்னடை போர்த்தி கௌரவித்ததுடன், நினைவுச்சின்னமும் வழங்கினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X