2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'பொருளாதார பின்னடைவால் தாய், தந்தையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை நீடிக்கின்றது'

Suganthini Ratnam   / 2014 ஜூன் 24 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கடந்தகால யுத்த நிலைமை காரணமாக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள தமது சமூகத்தின் தாய், தந்தையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இது தற்போதும் நீடிப்பதாக  கிழக்கு மாகாணசபை  உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற வகையில் இதை  நிவர்த்தி செய்வதற்கு பல திட்டங்ளை நிறைவேற்றியிருந்தாலும் கூட, இன்னும் பல ஏழை மக்களின் வாயில் கதவுகளை அத்திட்டங்கள் தட்டவில்லையென்பதற்காக   கவலையடைவதாகவும் அவர் கூறினார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட். பட். 37 நவகிரி வித்தியாலயத்திற்கு 27 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்திற்கு அடிக்கல் திங்கட்கிழமை (23) நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எதிர்காலத்தில் பட்டிருப்பு கல்வி வலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தை பெறவேண்டும். மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக பார்ப்போமானால், மட்டக்களப்பு நகரம் தற்போது முன்னிலையிலுள்ளது. இந்நிலையில், இதை முறியடித்து எதிர்காலத்தில் பட்டிருப்புக் கல்வி வலயம் முயற்சி எடுத்து கல்வியில் முன்னணியிலிருக்க வேண்டும்.

மட்டக்களப்பு நகரத்திலுள்ள  தேசிய பாடசாலைகள் பெறுபேறுகளை உயர்த்துகின்றன. ஆனால், மாகாண பாடசாலைகளின் பெறுபேறுகள் போதாதுள்ளன. இதை  முறியடிக்க பட்டிருப்புக் கல்வி வலய அதிகாரிகள் முயற்சியுடன் செயற்பட வேண்டும்.

கல்விக்காக எமது சேவைகளும் பணிகளும் என்றென்றும் தொடர்ந்து கொண்டிருக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு குறைவாகவுள்ளது. இருந்தபோதிலும், கல்விச் சமூத்தைப் பொறுத்தவரையில் தமது பிள்ளைகளை  வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு அவர்களிடமுள்ளது.

எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில்  வறுமையை குறைப்பதற்காகவும்  ஏழை மக்களுக்கு  உதவுவதற்காகவும்  பல மாற்றங்களை கொண்டுவரலாமென்று எதிர்பார்க்கிறோம். 

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு விளையாட்டுத்துறைக்கு அதிக நிதியொதுக்கீட்டைச்  செய்துள்ளது. இதனடிப்படையில், இம்மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கு தேவையாக அனைத்து உபரணங்களும் உள்ளன.  இவற்றை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்துடன் தொடர்புகொண்டு மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொள்ளலாம். இதை ஒருங்கிணைப்புச் செய்து நடைமுறைப்படுத்தினால் மாணவர்கள் அச்சமின்றி விளையாடி தேசிய மட்டம் வரை செல்வார்கள். மேலும், எதிர்காலத்தில் திறமையை வெளிக்கொணரும் பாடசாலைகளுக்கு அதிக விளையாட்டு உபகரணங்களை வழங்கமுடியும். 

பாடசாலைகளில்  குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவற்றுக்குரிய திட்டங்கள் எம்மிடம் வழங்கும் பட்சத்தில், பொருளாதார அபிவிருத்தி  அமைச்சினூடாக தீர்ப்பதற்கு முயற்சி எடும்போம். 

எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஏனைய கல்விச் சமூகம், அரசியல்வாதிகளென பலரும் இணைந்து எமது பிள்ளைகளின் கல்வியை உயர்த்தவும் இம்மாவட்டத்தின் வறுமையை  குறைக்கவும் பாடுபட வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X