2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

உயிரோட்டமான உறவை கட்டியெழுப்பவே கிழக்கு மாகாணத்தை பிரிக்க வேண்டுமென்று அடம்பிடித்தேன்: அதாவுல்லா

Suganthini Ratnam   / 2014 ஜூலை 28 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'ஒரு காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்வாறு உயிருக்கு உயிராக  நேசித்து உறவு கொண்டாடி, பரஸ்பர நன்மை, தீமையில் பங்குகொண்டு வாழ்ந்தார்களோ அதே உயிரோட்டமான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற பேரவாதான் கிழக்கு மாகாணத்தை நான் பிரிக்க வேண்டும் என்று அடம்பிடித்து நின்று அதனை பிரித்தெடுப்பதற்கு காரணமாக அமைந்தது.'

இவ்வாறு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

ஏறாவூர் ஆற்றங்கரையோர பூங்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை திறந்துவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'முன்னோர்களை போன்று எமக்கு பின்வருகின்ற சந்ததிகளும் பிரிக்க முடியாத உறவோடு இணைந்து வாழவேண்டும். கிழக்கு மாகாணம் என்பது தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்களுக்கு சொந்தமானது.

இந்த எதிர்பார்ப்பு இப்பொழுது 90 சதவீதம் சாத்தியப்பட்டிருக்கின்றது. ஆனால், 10 சதவீதம் சில சில சந்தேகங்களாக இருக்கின்றன. இந்தச் சந்தேகங்களுக்கு காரணம் சில அரசியல் தலைமைகளும் அரசியல் கட்சிகளும்தான்.

தாங்களும் தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளும் வாழ வேண்டும் என்பதற்காக தினமும் இனவாதங்களை பேசி முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருக்கின்ற ஒற்றுமையை சீர்குலைத்து அதன் மூலம் வாக்கு வேட்டையாடுகின்ற கேவலமான சிந்தனையாளர்கள்தான். இவ்வாறு தமிழ், முஸ்லிம் மக்களை பிரிக்கப் பார்க்கின்றார்கள். இந்த அநியாயக்காரர்களுக்கு நாம் இடமளிக்கக் கூடாது.

 அரசியல் சதிகாரர்கள்; சில நேரம் எல்லைப் பிரச்சினை என்பார்கள். இன முறுகல் என்பார்கள். இவற்றையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது.
எந்தக் கிராமம் எந்த ஊருக்குள்ளும் இருக்க முடியும். அது கிழக்கு மாகாணம்தான்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். இந்த அடிப்படையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நாம் முயற்சிக்கின்றபோது,  இனவாதிகள் முஸ்லிம்களையும் தமிழர்களையும் பிரிப்பதற்கு எப்பொழுதுமே சதி செய்து கொண்டு வந்திருக்கின்றார்கள். இது வரலாற்று உண்மை. இதற்கு நாம் ஒருபோதும் இனிமேல் இடமளிக்கவே கூடாது.

எல்லாம் வல்ல இறைவன் இந்த அநியாயக்காரர்களின் கறை படிந்த உள்ளங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றான். அவன் நீதியானவன். அவன் எமக்கு துணை நிற்பான்.

தினமும் நாங்கள் போராட்டம்  என்று பொங்கி எழ முடியாது. ஏனெனில், அதனால் இழப்புக்கள் ஏராளம். நாம் சற்று மாறுபட்டுச் சிந்தித்து இழந்தவற்றை ஈடுசெய்து ஒற்றுமைப்பட்டு வீறுகொண்டு எழவேண்டும்.

இன ஒற்றுமைக்காக எங்களை நாங்கள் தியாகம் செய்ய வேண்டும். எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும். சண்டித்தனம் காட்டி எதனையும் சாதிக்க முடியாது. அப்படி சாதித்த ஒரு வரலாறும் இதுவரை இல்லை. நீதியும் நேர்மையும் தான் வெற்றி பெறும்.' 

எமது முன்னோர்கள் நூற்றாண்டுகளாக ஆண்டு அனுபவித்த இயற்கையை சமீபகாலமாக நாம் மாசுபடுத்தியிருக்கின்றோம். வயல் நிலங்கள், காடுகள், வாவிக்கரைகள், ஏரிக்கரைகள், கடற்கரைகள் குளங்கள் எல்லாம் மாசுபடுத்தப்பட்டுத்தான் இருக்கின்றன.

எமது முன்னோர்கள் தமக்கு விரும்பிய இடத்தில் போய் விவசாயம் செய்வது, சுத்தமான காற்றைச் சுவாசிப்பது, சுத்தமான நீரைக் குடிப்பது இவ்வாறு பல தரப்பட்ட விடயங்களை ஆண்டு அனுபவித்து பேணிப் பாதுகாத்திருக்கின்றார்கள். நீர் மாசடைதலும் நீர் வற்றிப் போதலும் இன்று உலகம் எதிர்கொள்கின்ற பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

கடந்த இரண்டு, மூன்று தசாப்த காலத்திற்குள்ளே எம்மவர்கள் மிக மோசமாக இயற்கையை மாசடையச் செய்திருக்கின்றார்கள். கண்ட கண்ட இடங்களில் கழிவுகளை போடுவது, காடுகளை அழித்து  களனிகளுக்கு தீ வைத்து மாசடையச் செய்வது, நகரத்தையும் கிராமத்தையும் வீட்டையும் நாட்டையும் மாசடையச் செய்வது இப்படி நிலத்தையும் நீரையும் வளியையும் வான்மண்டலத்தையும் என்று இயற்கையை நாசம் செய்வதிலேயே அறிவீனமாக ஈடுபட்டிருக்கின்றோம்.  இதனால், நாம் பல்வேறு இயற்கைச் சவால்களை எதிர்கொண்டு அதனை ஈடுசெய்ய முடியாமல் திண்டாடுகின்றோம். இன்று நுளம்புத் தொல்லையே எமக்கு ஒரு போராட்டமாக உருவெடுத்துள்ளது.

மக்கள் தலைவர்கள் கலைஞர்களாகவும் ஆன்மிகவாதிகளாகவும் அறிஞர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல இதயம் கொண்டவர்களாகவும்  இருக்க வேண்டும்.  அப்படிப்பட்டவர்களால்தான் அனைத்து சவால்களை எதிர்கொள்ளவும் எதிர்காலத்தை வழிநடத்தவும் முடியும்.

காத்தான்குடியில் நீண்ட நெடுஞ்சாலையின் மத்தியிலே பேரீச்சை மரங்கள் ஓங்கி வளர்ந்து காய்த்துக் குலுங்குகின்றன. இது அங்குள்ள ஒரு கலைத்துவமுள்ள தலைவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சி என்பதை காலம் நிரூபித்து பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.
எறாவூர் நகரமும் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா என்கின்ற நல்ல சிந்தனையாளனின் கலைத்துவத்தில் இன்று அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. இது போன்று இன்று எமது நாடு அலங்கரிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.

மரங்களும் வாவிகளுமில்லாத சவூதி அரேபிய தேசத்தில் ஒரு மரத்தை நாட்டுவதற்கு அவர்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து முயற்சிக்கின்றார்கள். அதன் விளைவு இப்பொழுது மத்திய கிழக்கின் பாலைவனங்கள் பசுஞ்சோலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
ஒரு காலத்தில் குப்பை கொட்டப்பட்டுக்கொண்டிருந்த இந்த ஏறாவூர் வாவிக் கரையில், காணி வாங்கி பிரதேச செயலகத்தைக் கட்டினேன். இன்று இந்த இயற்கை எழில் கொஞ்சும் மனோரம்யமான இடம் பூங்காவாக உருமாற்றப்பட்டிருக்கின்றது.

இறைவனை நம்புவதற்கு இறைவனின் படைப்புக்களை உற்று நோக்க வேண்டும். இறைவனது கலைப் படைப்புக்களின் பெரும் சக்திகளை உணரமுடியாதவர்கள் வெறும் பிணங்களேயன்றி வேறில்லை.  இறைவனே மகத்தான பெருங் கலைஞன். அவனது கலைப்படைப்புகளின் ஆற்றலை ரசிக்க முடியாதவர்கள் உண்மையில் அந்த ஏக இறைனின் அற்புதத்தை உணர மாட்டார்கள். இறைவன் இம்மை, மறுமை சொர்க்கம் காடு கரை பற்றி உற்று நோக்கி அவற்றை நமக்கு அவனது அருள் மறையிலே தெளிவாக்குகின்றான். இவை பற்றி நம்மில் பலர் சிந்திப்பதே இல்லை.

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றது என்பது பற்றி நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? தேனீக்களை நீங்கள் உற்று நோக்கவில்லையா? என்று இறைவன் மனிதர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்புகின்றான்.

ஆற்றங்கரைப் பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.முஹம்மது ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X