2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஆட்சி மாற்றத்தின் பின்னர் த.தே.கூ. கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர

Sudharshini   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்
  

தற்போது மட்டக்களப்பு மக்கள் மாத்திரமல்ல, கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற விடயம் கிழக்கு மாகாண சபையாகும். மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாண சபையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்கவைத்துக் கொள்ளும் என எண்ணியிருந்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.


மட்டக்களப்பு, செட்டிபாளைய சிவனாலயத்தின் பவள விழாவை முன்னிட்டு, 'ஆனந்த கிரி' எனும் நூல்; ஞாயிற்றுக்கிழமை (08) வெளியிட்டு வைக்கப்பட்டது.


செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சங்கத்தின் தலைவர் சீ.நாகலிங்கம் தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,


இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தினை ஏன் ஏற்படுத்தினோம். கடந்த அரசாங்கத்தின் ஆட்சி உண்மையில் சரியான ஆட்சியில்லை, சரியான நிருவாகம் இல்லை, அராஜக அரசியலாக சென்று கொண்டிருந்தது. அதனை தொடரவிட்டால் எமது நிலை கேள்விக் குறியாகிவிடும் என்பதற்காக சென்ற மாதம் அந்த அரசாங்கத்தினை நாங்கள் வீழ்த்தினோம்.


தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நல்லாட்சியினூடாக, கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களை நாங்கள் அறியாமல் இல்லை.


முன்னாள் ஜனாதிபதி அலரிமாளிகையில் 500 மில்லியன் ரூபாய் பணத்தினை கடைசியாக விட்டுச் சென்றிருந்தார். ஒரு வீட்டில் இவ்வளவு பணம் எவ்வாறு வைத்திருக்க முடியும் என்பதனை நீங்கள் விரைவில் புரிந்துக்கொள்வீர்கள்.


இது மாத்திரமா? இங்கிருந்து வெளிநாட்டுக்கு கொண்டுச் செல்லப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். அந்தளவுக்கு மக்களின் பொருளாதாரத்தை முடக்கிய அரசாங்கத்தை நாங்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றோம்.


இந்த நாட்டில் புரையோடிப்போய் இருந்த இனப்பிரச்சினையை சர்வதேசத்துக்கு கொண்டு சென்றவர்கள் யார் என்பதனை நீங்கள் சிந்திக்க வேண்டும். தற்போதுகூட, புதிய அரசாங்கத்தினால் இது தொடர்பான விசாரணைகள் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு தூதுவரை ஜெனிவாவுக்கு அனுப்பி இருக்கின்றோம்.


எனவேதான், இந்த நாட்டிலே தமிழருக்கு வருகின்ற அனைத்து பிரச்சினைகளையும் தட்டிக்கேட்கின்ற உரிமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரமே உண்டு.


கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், 6,500 வாக்குகளை மேலதிகமாக நாங்கள் பெற்றிருந்தால்; கிழக்கு மாகணத்தில் ஆட்சி அமைத்திருக்க முடியும்.


இதன்போது, எமது சகோதர இனத்தின் உதவியை நாடினோம். ஆனால், அன்றிருந்த அராஜக அரசாங்கத்துடன் கைகோர்த்து ஆட்சி அமைத்துக் கொண்டனர். அன்றிருந்த நிலை வேறு. இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதும்;, எமக்கும் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், முஸ்லிம் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலமைச்சர் பதவியை எங்களுக்கு தாருங்கள் எனக் கோரியிருந்தோம்.


அதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். அன்று நாங்கள்  கிழக்கில் அமைச்சுப் பதவியினைத் தருகின்றோம் என்ற போது ஏற்க மறுத்தவர்கள், தற்பொழுது முதலமைச்சர் பதவியை எங்களுக்கு தர மறுக்கின்றனர்.


மைத்திரியை ஆதரித்த தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டு மறுக்கப்பட நிலையில், மஹிந்த அரசாங்கத்துடன்; கூட்டுச்சேர்ந்து அரசாங்கத்தை அமைத்து இருக்கின்றார்கள்.  அதுவும் முழுமையாக இல்லை. ஆகவே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
சிலர் இம்முறை முதலமைச்சர் பதவியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும், அதுதான் நீதி என்று கூறுகின்றனர். எனவே, முஸ்லிம் காங்கிரஸ் நீதிக்கு மாறாகத்தான் இந்த முதலமைச்சர் பதவியைப் பெற்றிருக்கின்றார்கள். ஆனால், நாங்கள் இதனை விடப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X