2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அனுமதி மறுப்பினால் 5000 இற்கும் மேற்பட்டவர்கள் கட்டார் செல்லமுடியாதுள்ளனர்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கட்டார் நாட்டின் பிறி  விஸா எனப்படும் கட்டாரில் சுயமாக வேலையை தேடிக்கொள்ளும் விஸா மூலம் கட்டார் நாட்டிற்கு செல்லவிருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதி மறுப்பினால் கட்டார் நாட்டிற்கு செல்லமுடியாமல் கடந்த ஒரு மாத காலமாக திண்டாட்டத்திற்குள்ளாகியுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.எல்.எம்.கணி தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலியிடம் சுட்டிக்காட்டி அவரின் கவனத்திற்கு  16.2.2015 அன்று கொண்டுவந்துள்ளார்.

இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கட்டார் நாட்டின்  பிறி விஸா எனப்படும் சுயமாக வேலையை தேடிக்கொள்ளும் விஸா மூலமும் மற்றும் கட்டார் நாட்டிலிருந்து உறவினர்களுக்கு அனுப்பும் விஸா மூலமும் இலங்கையிலிருந்து கட்டார் நாட்டிற்கு செல்லமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் வேலை ஒப்பந்த அனுமதிப்பத்திரம் இருந்தால் மாத்திரமே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கட்டார் செல்வதற்கான அனுமதியை வழங்கும் எனும் இந்த புதிய நடைமுறையினாலேயே இவ்வாறான கட்டார் நாட்டின் பிறி விஸா எனப்படும் சுயமாக வேலையை தேடிக்கொள்ளும் விஸா மூலமும் மற்றும் கட்டார் நாட்டிலிரு;நது உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பும் விஸா மூலமும் இலங்கையிலிருந்து கட்டார் நாட்டிற்கு செல்லமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே குறித்த கட்டார் நாட்டின் பிறி விஸா எனப்படும் சுயமாக வேலையை தேடிக் கொள்ளும் விஸா மூலமும் மற்றும் கட்டார் நாட்டிலிருந்துது இலங்கையிலுள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பும் விசா மூலமும் கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் வேலை ஒப்பந்த அனுமதிப்பத்திரமின்றி கட்டார் செல்வதற்கான அனுமதியினை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கி வந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையால் கடந்த   ஒரு மாதமாக  ஐயாயிரத்துக்கும் அதிகமானோர்; இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கட்டார் நாட்டில் இவர்கள் தொழில்களை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு கட்டாரிலிருந்து தமது உறவினர்கள் நண்பர்களுக்கு இந்த  விஸாக்களை அனுப்பியவர்கள் தொழில்களை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாதமொன்றுக்கு 275 மில்லியன் ரூபாய்  வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் நாட்டிற்கே அதிகம் தொழில் வாய்ப்புக்காக ஆண்கள் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த பிறி விஸா எனப்படும் சுயமாக வேலையை தேடிக் கொள்ளும் விஸா மூலமும் மற்றும் கட்டார் நாட்டிலிருந்துது இலங்கையிலுள்ள அவர்களின் உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பும் விசா மூலமும் கட்டாருக்கு சென்று அங்கு நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி அதன் மூலம் இலகுவாக தொழில்வாய்ப்பை பெற்று கூடுதலான வருமானத்தை தேடிக்கொள்கின்றனர்.

தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் வந்த இந்த புதிய நடைமுறையினால் இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும்; மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலியிடம் சுட்டிக்காட்டி அவரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இது தொடர்பாக அசாத் சாலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கொரலவின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளதுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்.

கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் வேலை ஒப்பந்த அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் என்ற இந்த புதிய நடைமுறையை தளர்த்துவதற்கு நான் நடவடிக்கை எடுப்பதாக அசாத் சாலி உறுதியளித்துள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை தொடர்ந்து இருக்குமாயின் மேற்படி கட்டார் இலங்கையர்களுக்கு வழங்கி வரும் பிறி விஸா எனப்படும் சுயமாக வேலையை தேடிக் கொள்ளும் விஸாக்களை இலங்கைக்கு வழங்குவதை நிறுத்தி ஏனைய இந்தியா மற்றும் பங்களாதேஸ் நேப்பாள் போன்ற நாடுகளுக்கு வழங்கக் கூடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X