Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 06 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பதை தடுக்கவேண்டும் என்று சூழ்ச்சி செய்தவர்கள், எம்மை ஆட்சியில் இருந்து துரத்த எத்தணித்தவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது நிலையானதாக இருக்காது என்ற காரணத்தினாலேயே நாம் உடன்படிக்கையின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
மட்டக்களப்பு, முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக்கழகத்துக்கு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'கிழக்கு மாகாணத்தில் இந்த மூன்று மாதங்களுக்குள் பலர் கபடத்தனமாக ஆட்சி அதிகாரத்தை பெற முயற்சித்தார்கள். ஆனால், அவர்களின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. கிழக்கு மாகாணசபையில் எமது நடவடிக்கை புதிய பரிணாமம் பெற்றுள்ளது. இதனை எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கக்கூடாது என்று நினைத்தவர்கள் மறுபடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் மண்டியிட்டார்கள். தாம் எங்களுடன் வந்து இணைவதாகவும் எமக்கு முதலமைச்சு பதவியை தருவதாகவும் தெரிவித்து கபட நாடகம் நிகழ்த்தினார்கள்.
இதன்போது எமது தலைவர் இரா.சம்பந்தன், தான் இது தொடர்பில் முடிவை மேற்கொள்ளமுடியாது. எமது மாகாணசபை உறுப்பினர்கள் பதினொரு பேரும்தான் இதனை தீர்மானிக்கவேண்டும் என்று தெரிவித்துவிட்டார். இதுதான் எமது தலைமையின் பண்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாகாணசபை ஆட்சியில் இருந்து துரத்த எத்தணித்தவர்களுடன் நாம் கூட்டுச் சேரும்போது, அது எமக்கு நிலையானதாக இருக்காது என்பதால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் அதிகாரப்பரவலாக்கத்தை கேட்பவர்கள். அப்படி ஒரு கொள்கையுடன் இருக்கும் நாங்கள் இன்று ஒரு தமிழ் பேசும் சமூகத்துடன் தான் இணைந்துள்ளோம். அவர்கள் எமக்கு பல தடவைகள் துரேகங்களை செய்திருந்தாலும், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் இருப்பதால் நாம் அவர்களுடன் சேர்ந்திருக்கின்றோம். ஆனால், அவர்களிடம் மண்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயாரில்லை.
இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆனால் ஏதோவொரு வகையில் இன்று எமக்கு இந்த மாகாணசபை முறைமை கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இந்த முறையில் வடக்கு, கிழக்கை பிரித்ததன் பின்னர் ஆட்சியமைப்பது தொடர்பில் நாம் கூட்டிணைய வேண்டி இருக்கின்றது. இதனால் தான் நாம் பலரினால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். எமது வடக்கு, கிழக்கு இணைந்திருந்தால் எமது ஆட்சி எப்போதோ நிலையான ஆட்சியாக பரிணமித்திருக்கும்.
வட, கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பிரிவினை இல்லாமல் உள்ளக சுயாட்சி முறைமையை ஏற்று இதற்கு எமது மக்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்ற பல எண்ணப்பாடுகளுடனேயே நாம் தற்போது அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றோம்.
இந்த நாட்டை பிரிக்கக்கூடாது என்ற நோக்கமே எம்மிடமும் இருக்கின்றது. நாம் ஒற்றுமையாக இருந்து எமது மக்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும். இந்த கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதமாக இருக்கின்றோம். ஆனால் இந்த மாகாணத்தில் 36 சதவீதமாக இருக்கின்ற சகோதர முஸ்லிம் இனத்தவர்கள் எம்மை விட, அதிகமான உறுப்பினர்களை பெறுகின்றார்கள். இது எவ்வாறு நிகழ்கின்றது என்று எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.
எனவே எமது ஒற்றுமையும் எமது பலமும் சேரும் பட்சத்திலே தான் நாம் யாரிடமும் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது' என்று தெரிவித்தார்.
இதேவேளை, இங்கு கிழக்கு மாகாணசபையின் விவசாய கால்நடைகள் அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைராஜசிங்கம் உரையாற்றுகையில்,
'கிழக்கு மாகாணசபை விடயம் தொடர்பில் பல கசப்பான விடயங்கள் இடம்பெற்றன. ஆனால், நாம் நடந்து முடிந்த கசப்புகளை மறந்து எமது மக்களுக்கு இனி நடக்கவிருக்கும் இனிப்பான விடயங்களையே தெளிவுபடுத்த வேண்டும்.
கடந்த மூன்று மாதங்களாக நான் மாகாணசபை தொடர்பிலும் சரி ஏனைய அரசியல் விடயமாகவும் சரி நான் பேசவில்லை. ஏனெனில், இந்த மூன்று மாதங்களும் தமிழ் மக்கள் பல்வேறு விதமான செய்திகளால் திக்குமுக்காக்கப்பட்டனர்.
எமது மாகாணசபை விவகாரம் தொடர்பில் ஊடகங்களும் பல உத்திகளை கையாண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. அதிலும் அவ்வுத்திகள் ஒரு தரப்பை மாத்திரமே வெளிப்படுத்துவனவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சில ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்மாறான விளைவைத்; தோற்றுவிக்கும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டமையும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு செய்தி வெளிப்படுத்தப்படும் பொது இரு தரப்பிலிருந்தும் உண்மைத் தன்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஊடகங்கள் செய்தி ஒன்றினை அதன் உச்ச நிலைக்கு எடுத்துச் சென்று அதற்கு மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி ஒரு தொடர்தன்;மையை ஏற்படுத்தி விடுகின்றார்கள். அப்படித்தான் குறிப்பிட்ட காலத்தில் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் ஊடகங்கள் பல உத்திகளைப் பயன்படுத்தி மக்களுக்கு நியாயபூர்வமான செய்திகளையும் வெளியிட்டிருந்தார்கள். தற்போது எல்லா விடயங்களுக்கும் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எதுவாக இருந்தாலும் எமது அரசியல் பயணத்தில் புதிய புதிய அத்தியாயங்கள் திறக்கப்பட்டதுடன் அவை முன்னையவற்றை விட சில வித்தியாசங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசியல் பயணம் 1949ஆம் ஆண்டு தொடக்கம் 1965ஆம் ஆண்டுவரை ஒரு ஓட்டமான அரசியல் பயணமாக இருந்தது. எமது குரல் ஓங்கி ஒலித்த காலம். அதன் பின் 1965 தொடக்கம் 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது கட்சி தேசிய அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தது. பின்னர் 1970 தொடக்கம் 2014 வரை ஒரு விதமான வீச்சு அரசியல் நிலை இடம்பெற்றது. அதிலும் 2014 இறுதி ஒன்றரை மாதங்களும் ஒரு அரசியல் மாற்றத்தினை வேண்டி எமது அரசியல் பயணம் நிகழ்ந்தது பின் 2015.01.08ம் திகதிக்கு பின்னர் தற்போதைய சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு நாம் பங்காளிகள். அந்த மாற்றத்தில் பங்குபெற வேண்டியவர்கள் என்ற உணர்வோடு செயற்பட வேண்டியவர்ககளாக இருக்கின்றோம்.
நாம் தற்போது பல விடயங்களில் சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாம் சேர்ந்து ஆதரவு கொடுத்து மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்திப் பெற்ற இந்த அரசை தற்போதைய நிலையில் சங்கடத்துக்குள் ஆழ்த்தமுடியாது. நாம் எமது வரலாறுகளை திரும்ப பார்த்தது காலத்தின் தேவைக்கேற்ப நாம் மேற்கொள்ளாத நடைமுறைகளை தற்போதைய நிலையில் அவ்வாறான விடயங்களை மேற்கொண்டு நடந்துகொள்ள வேண்டும் என தீர்மானித்தோம்.
தற்போது நல்லிணக்க அரசியல் என்ற வகையில் கிழக்கு மாகாணசபையிலும் நாம் பேசுகின்ற அரசியல் நல்லிணக்கம் இருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் சில விடயங்களை நாம் அவதானித்து மேற்கொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த கசப்புகளை மறந்து மக்களுக்கு இனி நடக்கவிருக்கும் இனிப்பான விடயங்களையே தெரிவிக்க வேண்டும். இதுதான் நல்ல தலைமைக்கு அழகு' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago