Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 06 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாணசபையை பொறுத்தமட்டில் பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல விவாதங்கள் இடம்பெற்றன. இடம்பெறுகின்றன. ஆனால், எமது உரிமைகளையும் தனித்துவத்தையும் விட்டுக்கொடுக்காமலே இந்தப் பதவிகளை பெற்றோம். நாம் எவரிடமும் கெஞ்சிக்கேட்டு பதவிகளை பெறவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா தெரிவித்தார்.
முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக்கழகத்துக்கு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'பிரிக்கப்படாத தீவில், எமது தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படாத சமஷ்டி முறையான தீர்வு இந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிலை ஏற்பட்டால், நாம் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படலாம் என்பதே எமது தலைவர் இரா.சம்பந்தனின் கொள்கை.
இந்த மாகாணசபை முறைமை தமிழ் மக்களின் போராட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டது. இது எமது மக்களுக்கான மாகாணசபை. எமது மக்களின் இளைஞர்களின் உயிர், உடைமைகளை இழந்த எமக்கு இந்திய அரசின் அனுசரணையுடன் தோற்றுவிக்கப்பட்டதே இந்த மாகாணசபை முறைமை.
எமது மக்கள் சிந்திய இரத்தத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட மாகாணசபையை இன்னுமொரு சமூகம் அனுபவித்துவருவதும் எம்மை அதிலிருந்து புறம் தள்ளுவதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். நாம் இந்த மாகாணசபையில் போட்டியிட்டது வெறுமனே அபிவிருத்திக்காகவோ அல்லது அரசு அமைப்பதற்காகவோ அல்ல. எமது மக்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற பற்றுதலை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தவேண்டும் என்பதற்காகவே 2012ஆம் ஆண்டு தேர்தலில் நாம் போட்டியிட்டோம்.
அப்போதிருந்த அரசு அவர்களது பக்கமும் தமிழர் ஒருவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டார் என்பதைக் காட்ட சூழ்ச்சி மூலம் சந்திரகாந்தனைத் தெரிவு செய்தனர். ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக விழுமியங்களை பேணுகின்ற அரசில் பெரும்பான்மை அங்கத்தவர்களை பெற்ற கட்சியே ஆட்சியமைப்பது வழமை. ஆனால் கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் எந்தவொரு இனமும் தனித்து ஆட்சி அமைப்பது என்பது முடியாத விடயமே.
மத்தியில் புதிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றதுடன், கிழக்கில் ஏற்படவிருந்த ஆட்சி மாற்றத்தில் தமிழர் முதலமைச்சராக வரக்கூடாது. அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து முதலமைச்சர் ஒருவர் வருவதை தடுக்கவேண்டும் என்ற சூழ்ச்சியே கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் விடயத்தில் இடம்பெற்றது. இதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக சோரம் போன எமது மாகாணத்தின் எட்டப்பர்களே இருந்தார்கள். அவர்களின் சூழ்ச்சியினாலேயே நாம் ஏமாற்றப்பட்டோம். எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த மாகாணசபை ஆட்சியில் இணைந்தோம். இருப்பினும் நாம் அவர்களிடம் எதனையும் கெஞ்சிக் கேட்கவில்லை மிஞ்சியே எமது வாதத்தினை முன்வைத்தோம்.' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago