Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 12 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'ஊழல் மோசடிகளில் நான் ஈடுபட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அரசியலிலிருந்து நான் ஒதுங்கிக்கொள்வேன்' இவ்வாறு முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று புதன்கிழமை முறைப்பாட்டை முன்வைத்தது. இது தொடர்பில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர்,
'இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் என் மீது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்வைத்த முறைப்பாட்டை மிக அவசரமாக விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
கடந்த 25 வருடங்களாக பல்வேறு பெயர்களில் அரசியல் செய்துவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக என் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றது.
இலஞ்சம் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அவர்களை நான் ஒரு மாதத்துக்கு முன்னர் கேட்டிருந்தேன். அதனை ஏற்று அவர்கள் முறைப்பாடு செய்துள்ளமையை இட்டு நான் மகிழ்ச்சியடைவதுடன், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது 25 வருட அரசியல் பயணம் எப்படிப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கு இவர்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள். இதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் எனது சட்டத்தரணி ஊடாக இந்த முறைப்பாட்டை மிக அவசரமாக விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன். அவ்வாறு விசாரிக்கப்பட்டு நிதி மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களில் நான் ஈடுபட்டுள்ளேன் என்று இலஞ்சம் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவிக்குமாயின், அரசியலிலிருந்து முற்றுமுழுதாக ஒதுங்கிக்கொள்வேன்' எனக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .