Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 13 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.எம்.நூர்தீன்
'ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து கிழக்கு மாகாணசபையில் அனைவரும் வரவேற்கத்தக்க ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் ஏற்படவேண்டும் என்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு அரசியலின் நம்பிக்கைக்குரிய தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு, காத்தான்குடியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இந்த நாட்டில் ஏற்பட்ட நம்பிக்கை தரும் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, கிழக்கு மாகாணசபை ஆட்சியிலும் புதிய மாற்றம் ஏற்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பயங்கரவாத சூழ்நிலைகளின் காரணமாக துருவப்படுத்தப்பட்டிருந்த அரசியலாக மாறியுள்ள தமிழ் - முஸ்லிம் அரசியலில் இணக்கப்பாட்டு சூழ்நிலை உருவாகவேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அதற்கான நல்ல தொடக்கமாக கிழக்கு மாகாணசபை ஆட்சி மாற்றம் அமையவேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால், நிலைமை வேறு விதமாக மாறத்தொடங்கியது.
கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவி தொடர்பான சர்ச்சை, முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் கருத்து மோதலாக மாறியது. முதலமைச்சர் பதவி தமக்கே கிடைக்கவேண்டும் என்ற தம்பக்க நியாயங்களை இரண்டு தரப்பும் முன்வைக்கத்தொடங்கினர். இது தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நிரந்தர அரசியல் பகையாக மாறக்கூடிய அபாயநிலைக்கு சென்றது.
இரண்டரை வருடங்கள் செல்லுபடியான முதலமைச்சர் பதவி விவகாரம், நிரந்தரமான அரசியல் இடைவெளியை இரு சமூகங்களுக்கிடையில் உருவாக்கக்கூடாது என்பதில் அக்கறை கொண்ட நாம், உடனடியாக இந்த விடயத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தோம்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடன் அவசர சந்திப்பை மேற்கொள்ளவேண்டும் என்று கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி மாலை தீரமானித்தோம். இந்த சந்திப்பு பற்றி எமது தலைமைத்துவசபை உறுப்பினர் பழுலுல் ஹக் தனது முகநூல் பக்கத்தில் அன்றையதினமே குறிப்பொன்றையும் இட்டிருந்தார்.
யுத்தத்துக்கு பின்னரான சூழலில், தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை சகல வழிகளிலும் ஏற்படுத்தவேண்டிய தருணத்தில், முதலமைச்சர் விவகாரம் தமிழ் -முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான அரசியல் பகையாக உருவாகும் அபாயம் ஏற்பட்டிருந்ததை தெளிவுபடுத்தினோம்.
மாகாணசபை ஆட்சிக்கால ஆரம்பத்தில், முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதற்கு முன்வந்ததை போன்றே, தாராளத்தன்மையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமது முடிவுகளை மேற்கொண்டால், அது இரண்டு சமூகங்களினதும் எதிர்கால அரசியல் மேம்பாட்டுக்கு பெறுமதிமிக்க பங்களிப்பாக அமையும் என்று எடுத்துரைத்தோம்.
அத்துடன், முதலமைச்சர் பதவியில் விட்டுக்கொடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபையில் எதிர்க்கட்சியில் அமருமாயின், அது முரண்பாட்டின் பிரதிபலிப்பாக பார்க்கப்படும். இதனால், அமையப்போகும் மாகாணசபை ஆட்சியில் அமைச்சுக்களை பொறுப்பெடுத்து ஆட்சியில் பங்குபற்றி சகல சமூகங்களுக்கும் சேவையாற்றவேண்டும் என்று வேண்டுகோள் முன்வைத்தோம்.
இதை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம், தமிழ் - முஸ்லிம் உறவை கிழக்கில் வலுப்படுத்தத்தக்க பொருத்தமான முடிவுகளை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தது.
கல்வி நிர்வாக சேவையில் அதி உயர் அனுபவத்தைக்கொண்ட த.தே.கூ. உறுப்பினரான தண்டாயுதபாணிக்கு கல்வி அமைச்சை வழங்காமல், கல்வி நிர்வாகத்துக்கு பொருத்தமில்லாத ஒருவருக்கு இந்த அமைச்சை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் வழங்கியதானது எல்லோருக்கும் பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்தது. அவர்களின் அரசியல் பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் எவ்வாறானது என்பதை உணர்த்துவதாகவும் இது இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2ஆம் திகதி மாகாணசபையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. கிழக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வரவேற்கத்தக்க, முன்னேற்றமான மாற்றமாகும். தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இணக்கப்பாட்டு, நல்லிணக்க அரசியலின் தொடக்கமாக அமைந்துள்ள இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு உரியநேரத்தில் பெறுமதியான பங்களிப்பை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்திருக்கிறது
கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமூகங்களின் நலன்களை முன்னிறுத்தி நாம் இந்த பங்களிப்பை செய்தோம். அரசியலில் நாம் கொண்டுள்ள தூய நோக்கங்களுக்கு இறைவன் பொருந்திக்கொண்டிருக்கிறான் என்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .