2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'வீடு கட்டுவதற்குரிய அனுமதி தாமதம்'

Gavitha   / 2015 மார்ச் 14 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபையிடமிருந்து வீடு ஒன்று கட்டுவதற்குரிய அனுமதியை பெற்றுக்கொள்ளவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால், தாம் இதற்கான விண்ணப்பத்தை பிரதேச சபைக்கு வழங்கிய பின்னர் அனுமதிக்காக ஒரு மாதமளவில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது என்று போரதீவுப்பற்று பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீடு ஒன்று கட்டுவதற்கு பிரதேச சபையினதும் பொது சுகாதார பரிசோதகரினதும் அனுமதி பெறுவது வழங்கமான செயற்பாடாகும்.  ஆனாலும் இவற்றுக்குரிய விண்ணப்பத்தை பிரதேச சபைக்கு வழங்கிய பின்னர், சுமார் ஒரு மாதமளவில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தாம் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றுமு; போரதீவுப்பற்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சோ.குபேரனை தொடர்பு கொண்டு கேட்போது,
'பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான அனுமதியை பிரதேச சபை வழங்கி வருகின்றது. ஆனால், எமக்கு மக்களால் கொடுக்கப்படும் விண்ணப்பங்களில் எதுவித பிழைகளுமின்றி இருக்குமாயின், அதற்குரிய அனுமதியை வழங்குவதற்கு ஒருமாதம் எடுக்கும். எமது தொழில்நுட்ப அதிகாரிகள், உரிய இடத்துக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர்,  அந்த விண்ணப்பத்தை நாம் வெல்லாவெளியில் அமைந்துள்ள பொது சுகாதார பரிசோதகரின் பரிந்துரைக்காக நாம் அனுப்பி வைப்போம்.

நாம் அனுப்பிய விண்ணப்பங்கள் யாவும் பொது சுகாதார பரிசோதகர்  பார்வையிட்டதன் பின்னர், அங்கிருந்து மீண்டும் அந்த விண்ணப்பம் எமக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் காரணமாகவே அனுமதி வழங்குவதற்கு தாமதம் ஏற்படுகின்றது. எமது காரியாலயத்தில் எதுவித காலதாமதமும் கிடையாது. நாம் அனுப்பும் விண்ணப்பங்கள் அனைத்தும்  விரைவாக பரிசிலிக்கப்பட்டு எமக்கு கிடைக்குமாயின், ஓரிரண்டு வாரத்தில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்குரிய அனுமதியை வழக்கிவிடுவோம்' என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வெல்லாவெளி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.சண்முகநாதனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

'எமது பிரதேசத்துக்கு 6 பொதுசுகாதார பரிசோதகர்கள் கடமையாற்ற வேண்டிய இடத்தில், தற்போது 3 பொதுசுகாதார பரிசோதகர்கள்தான் கடமையில் உள்ளனர். எமக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இருந்த போதிலும் எமக்கு பிரதேச சபையிடமிருந்து கிடைக்கும் மேற்படி விண்ணப்பங்களின் அடிப்படையில், எமது பொது சுகாதார பரிசோதகர்கள் உரிய இடங்களுக்கு சென்று பார்வையிட்ட பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வெகு விரைவாக மீண்டும் பிரதேச சபைக்கு அனுப்பி வைக்கப்படும்.

எமது காரியாலயத்தினால் தான் பொதுமக்களின் விண்ணப்பங்கள் காலதாமதமாகின்றன என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, வியாழக்கிழமை (12) எமது காரியாலய உத்தியோகஸ்தர்களுக்கும் போரதீவுப்பற்று பிரதேசசபை உத்தியோகஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், மக்களின் இவ்வாறான பிரச்சனைகளைத் மிகவிரைவில் தீர்த்து வைக்கவும், வீடு கட்டுவதற்குரிய விண்ணப்ப அனுமதியை குறைந்தது இரண்டு வாரத்துக்குள்ளாவது வழங்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது' என்று அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் போரதீவுப்பற்று பிரதேச சபையில், தவிசாளரின் தலைமையில் இயங்கி வந்த நிருவாக்கட்டமைப்பின் கீழ், வீடு கட்டுவதற்குரிய அனுமதி ஒரு வாரத்தில் வழங்கப்பட்டன. கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் இப்பிரதேச சபையின் தவிசாளரின் தலைமையில் இயங்கி வந்த நிருவாக்கட்டமைப்பு அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டதன் பின்னர், தற்போது போரதீவுப்பற்று பிரதேசசபை, பிரதேசசபைச் செயலாளரின் கீழிருந்தே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X