2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான மாவட்ட ஆலோசனைக்குழுக் கூட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 15 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரியுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் 5 ஆண்டு கால திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான மாவட்ட ஆலோசனைக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்குழுக் கூட்டத்தில், நல்லாட்சி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சமூக மட்ட அமைப்புக்களின் மேம்பாடு, இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டன.

மேலும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களின் தற்போதைய நிலைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.

இளைஞர்களுக்கான திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தலைமைத்துவப் பயிற்சிகளுக்கு 200 இளைஞர், யுவதிகள் பிரதேச மட்டங்களில் இருந்து தெரிவு செய்து, 5 குழுக்களாக பிரித்து 3 மாதகால பயிற்சி நெறியை  வழங்குவதற்கான செயற்றிட்டம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஏ.புஸ்பானந்தன் விளக்கமளித்தார்.

சமுகத்திலிருக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்தப் பயிற்சிநெறிகள் நடைபெறவுள்ளன.

புதிய சிந்தனையுடன் புதிய தொழில்நுட்ப அணுகுமுறையுடன் நல்லாட்சியினை கிராம மட்டங்கள் தோறும் விருத்தி செய்தலை மையமாகக் கொண்டு இப்பயிற்சிநெறிகள் நடத்தப்படவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் ஒருபகுதியே இச்செயற்றிட்டமாகும்.

2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் துறைசார்ந்த மாவட்ட அபிவிருத்தித்திட்டமானது, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களான யுனிசெப், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், சர்வதேச நிதி நிறுவனம், உலக விவசாய நிறுவனம், உலக தொழிலாளர் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்துகின்றன.

இதில், கல்வி அபிவிருத்தி, தொழில்துறை அபிவிருத்தி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கரையோரம் பேணல், விவசாயத்துறை, மீன்பிடித்துறை, சிறுவர் அபிவிருத்தி என பல்வேறுபட்ட துறைகள் சார்ந்த அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட 5 ஆண்டு திட்டத்திற்கமைவாக துறை ரீதியாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப்பிரிவுகளும் உள்ளடக்கப்பட்ட வகையில இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X