2025 மே 19, திங்கட்கிழமை

சிகிரியா விவகாரம்; பொது அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 16 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிகிரியா பளிங்குச் சுவரில் தன் பெயரை எழுதிய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதியின் அவலநிலையை கருத்திற்கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, சித்தாண்டியிலுள்ள 17 பொது அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளன.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சித்தாண்டி பொது அமைப்புகள் அனைத்தும் இணைந்து 14ஆம் திகதி, சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதியின் சூழ்நிலை தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டு எடுத்த தீர்மானத்துக்கு இணங்கனே தங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்புகின்றோம்.

கிழக்கு மாகாணத்தின் சித்தாண்டியை பிறப்பிடமாகவும் விசிப்படமாகவும் கொண்ட செல்வி சின்னத்தம்பி உதயசிறி (வயது 27) என்ற யுவதி, கடந்த 14.02.2015 அன்று தான் வேலை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் சுற்றுலா ஒன்றுக்காக சென்றிருந்தார்.

இதன்போது, சிகிரிய ஓவியங்களைப் பார்வையிட சென்றவேளை, அங்கிருந்த பளிங்குச் சுவற்றில், தனது பெயரை எழுதினார் என்ற அடிப்படையிலேயே அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த யுவதி, தனது சிறு வயதிலே தந்தையை இழந்தவர்.  அத்துடன், அவரது தாய் ஒரு கண்ணை இழந்த நிலையில் மிகவும் கஸ்டப்பட்டு அரிசி குற்றி விற்பனை செய்தும் இடியப்பம் மற்றும் பிட்டு போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்துமே குடும்பத்தைக் கொண்டு நடத்தியுள்ளார். தமது குடும்ப கஸ்டம் காரணமாவே இவர் தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மேலும் இந்த யுவதியின் சிறைவாசமானது குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது.

தனது அறியாமை காரணமாக உதயசிறிக்கு இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.இதனையிட்டு மனம் வருந்துகின்றோம். எமது சித்தாண்டி பொது அமைப்புக்கள் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் அவர் செய்த தவறுக்காக மன்னிப்பும் கோருகின்றோம்.

இந்த யுவதியின் எதிர்கால வாழ்க்கையை கருத்திற்கொண்டும் குடும்ப சூழ்நிலையை கருத்திற்கொண்டும் அவருக்கான பொது மன்னிப்பினை வழங்கி விடுதலை செய்து குடும்பத்தில் இணைந்து வாழ்வதற்கு உதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்' என அக்கடிதத்தில் மேலம் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X