2025 மே 19, திங்கட்கிழமை

உதயசிறியை விடுவிக்குமாறு கோரி மற்றுமொரு மனு

Gavitha   / 2015 மார்ச் 18 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதி சிறைவாசம் அனுபவிக்கும் பெண்ணை விடுதலை செய்யுமாறு கோரி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணை மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கருணை மனு செவ்வாய்க்கிழமை (17), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி. செல்வி மனோகரின் கையொப்பம் இட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில், 'யுத்தத்தின் அச்சத்தினால் வீட்டை விட்டு வெளியில் வராமல், குடும்பச்சுமைகளுடன் வேதனைகளுக்கு மத்தியில் வாடிக் கொண்டிருந்த நிலை தற்போது படிப்படியாக மாறி வருகின்றது.

எமது கிழக்கு மாகாணப்பெண்கள் யுத்தத்தினால் ஒடுக்கப்பட்ட சூழலிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், இந்த பெண் கைது செய்யப்பட்டமை,  ஏனைய தமிழ் பெண்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்ச நிலையை  தோற்றுவிக்குமோ என்று அஞ்சுகின்றோம்.

புராதன பொருட்களை அழிப்பதோ, சேதப்படுத்துவதோ, தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். ஆயினும் யுத்த அடக்கு முறைக்குள் இருந்து வெளியில் வந்த எமது பெண் சமூகம் மேற்படி சட்ட விதிகளை,  குறிப்பாக புராதன பொருட்களை பேணும் சட்டமூலங்களை அறிந்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

அது மட்டுமின்றி இந்த பெண் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை நடத்தி வரும் ஒரு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் சி.உதயசிறியின் வருமானத்திலேயே அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனவே தாங்கள் பெருமனதுடன் குறித்த பெண்ணின் குடும்ப மற்றும் எதிர்கால வாழ்வை கருத்திற் கொண்டு, தங்களின் பொதுமன்னிப்பு அடிப்படையில் உதயசிறியை விடுதலை செய்ய ஆவண செய்யுமாறு கோரி நிற்கின்றோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X