2025 மே 19, திங்கட்கிழமை

'ஏறாவூர்ப்பற்று பாடசாலைகள் முன்னேறவேண்டியுள்ளது'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 23 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பின்தங்கிய நிலையிலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேசப் பாடசாலைகள் முன்னேறவேண்டியதன் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்,

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட ஆசிரியரும் பிரதி அதிபருமான என்.இராஜதுரையின் 25 வருட ஆசிரியர் சேவையை பாராட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளபோதும்,  வளப் பற்றாக்குறையுடன் உள்ளது.

கலைமகள் மகா வித்தியாலயத்தில் சமீபத்தில் உயர்தர விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் அதற்கான வளங்கள், ஆசிரியர்கள் இல்லாத நிலையிலேயே மாணவர்கள் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களை இந்த வளப்பற்றாக்குறையுடன்  ஊக்கப்படுத்தி வழிகாட்ட  வேண்டியுள்ளது.

இந்தப் பாடசாலையில் மிக முக்கியமாக வகுப்பறைத் தேவைகள் இருக்கின்றன. அவற்றையும் சீரான முறையில் நிறைவேற்றவேண்டும்.

இந்தப் பாடசாலையில் ஒன்றுகூடல் மண்டபம் கூட இல்லை. இதற்காக ஏதாவது விஷேட அபிவிருத்தித் திட்டங்கள் கிடைக்கப் பெறுமாக இருந்தால், நான் முன்னுரிமையின் அடிப்படையில் இந்தப் பாடசாலைக்கு ஒன்றுகூடல் மண்டபம் அமைக்க முடிந்த ஏற்பாடுகளைச் செய்வேன்.

கடந்த வருடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கட்டடத்தை திருத்தியமைப்பதற்காக 5 இலட்சம் ரூபாவை வழங்கமுடிந்தது. இந்தப் பிரதேசத்தில் உள்ள கல்வியில் ஆர்வமுள்ளோர் மேலும் இந்தப் பாடசாலையை முன்னேற்றப் பாடுபடவேண்டும்.
அதேவேளை தற்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை. அவர்களுக்கு எமது கல்விப் பணிமனை நன்றி தெரிவிக்கின்றது.

இன்று தனது ஆசிரியர் சேவையில் வெள்ளி விழாவை நிறைவு செய்யும் பாடசாலையின் பிரதி அதிபர் என்.இராஜதுரை இரவு, பகலாக இந்தப் பாடசாலைக்கு தன்னை தியாகம் செய்து அரும்பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். அத்தகைய ஒரு பெருந்தகையின் பாராட்டு விழாவில் நான் கலந்துகொண்டிருப்பதையிட்டுப் பெருமையடைகின்றேன்' என்றார்.

நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியம் அமீரலி, வித்தியாலய அதிபர் எஸ்.அப்துல் கபூர், ஐயங்கேணி வித்தியாலய அதிபர் எம்.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X