2025 மே 19, திங்கட்கிழமை

உலக நாச்சியின் திருவுருவச்சிலை உடைக்கப்பட்டமைக்கு கண்டனம்

Kogilavani   / 2015 மார்ச் 25 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தின் கோவில்குளத்தை தனது கோட்டையாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த கிழக்கின் முதற் சிற்றரசியான உலக நாச்சியின் திருவுருவச்சிலை உடைக்கப்பட்டதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஆற்றல் பேரவை விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஆற்றல் பேரவையின் தலைவர் பூ.பிரசாந்தன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 

பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச பெண்கள் நாளாக பிரகடணப்படுத்தியுள்ள மார்ச் 8ம் திகதியையொட்டி பல நிகழ்வுகள் நடைபெற்று வந்த் வேளையில் கிழக்கின் முதலாவது பெண் சிற்றரசியின் சிலை உடைக்கப்பட்டது.

பெண்களின் மகிமையை கூறும் மாதத்தில் பெண் தலைமைத்துவத்தை தகர்த்துள்ளமையானது வேதனையைத் தருகின்றது. ஒவ்வொருவரும் தமது கலாசார மார்க்கப் பண்புகளையும் பதிவுகளையும் முன்னுரிமைப்படுத்துவதற்கு இலங்கை திருநாட்டில் எத்தடையும் இல்லை.

ஆனால் ஆரையம்பதிப் பிரதேசத்தில் மட்டும்; எமது தமிழர்களின் பாரம்பரியங்களை பேணிப்பாதுகாக்க முற்படும்போது தகர்ப்புகளும் தடைகளும் ஏற்படுத்தப்படுவது மேலும் மேலும் ஒடுக்கு முறையின் உச்சக்கட்டத்தையே வெளிப்படுத்துகின்றது.

ஆரையம்பதி பிரதான வீதியில் வைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு முதுலாம் நாளே உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக தீவிர விசாரனை செய்த பொலிஸார் காத்தான்குடியைச் சேர்ந்த மூவரை கைதுசெய்தனர்.
பின்னர் அவ்விடத்தில் புதிய சிலை நிறுவப்பட்டது.

23.9.2013 இல் மீண்டும் பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த உலகநாச்சியின் திருவுருவச்சிலையின்; வாள் ஏந்திய கை உடைக்கப்பட்டதுடன் அச்சிலையை பூரணமாக தகர்ப்பதற்கு முற்பட்டபோது ஒட்டமாவடியைச் சேர்ந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டார்.

அதேபோன்று 2014.09.15 இல் உலகநாச்சியின் திருவுருவச்சிலை கோவிற்குளம் சிகரம் பகுதியில் நிறுவ முற்பட்டபோது அதற்கு தடைவதிக்கப்பட்டதுடன் பின்னர் பொலிஸ் விசாரணையின் பின்னர் மீண்டும் அவ்விடத்தில் சிலை நிறுவப்பட்டது.

இருப்பினும் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவில் மீண்டும் ஆரையம்பதி உள்வீதியில் நிறுவப்பட்டிருந்த உலக நாச்சியின் திருவுருவச்சிலையில் வாள் ஏந்திய கை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது என்றால் எவ்வாறு எம் தமிழரின் புராதன ஆவணங்களை பேணிப்பாதுகாப்பது என்ற ஐயம் எம்மை சூழ்கின்றது.

தமிழ்,முஸ்லிம் உறவு  மிகவும் சிறப்பாக மலர்ந்துள்ளதற்கு உதாரணமாக காணப்படும் ஆரையம்பதி பிரதேசத்தில் இவ்வாறு மேலும் மேலும் தமிழர்களின் பாரம்பரிய ஆவணப்படுத்தல்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அத்தோடு குற்றவாளிகளை பொலிஸார் சமூகத்தின் முன் அடையாளப்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

உலகநாச்சி கிழக்கின் முதல் சிற்றரசியாகவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை அடையாளப்படுத்தி பூசைகளை மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு படுவான்கரை பகுதியில் உலகநாச்சியின் வம்சாவளி குடிமக்களும் உள்ளனர். இது அம்மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயற்பாடாகவும் அமைகின்றது' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனவே இவ்வாறான விசத்தனமான செயற்பாடுகள் மூலம் ஓர் இனத்தின் அடையாளத்தினையோ,இருப்பையோ ஒரு போதும் அழிக்கமுடியாது மாறாக மனிதர்களிடையேயும் வீண்சந்தேகங்களையும்,விரிசலையுமே எற்படுத்தும் என்பதனைச் சுட்டிக்காட்டுவதுடன் குறித்த இந் நாசகார செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாக மண்முனை ஆற்றல்பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X